நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு மத்திய கிழக்கு யுத்தம் காரணமல்ல. அது அரசாங்கத்தின் தவறான நடவடிக்கையால் மேற்கொள்ளப்பட்டதாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஷாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் வேதனம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என டிசம்பர் மாதம் நான் இந்த சபையில் தெரிவித்திருந்தேன். அதேபோன்று எரிவாயு தட்டுப்பாடு பிரச்சினை பெப்ரவரி மாதம் ஏற்பட்டது. அதனால் எரிவாயு பிரச்சினையை மத்திய கிழக்கு யுத்தத்துடன் தொடர்புபடுத்தக்கூடாது. ஓமான் நாட்டுடன் இருந்த ஒப்பந்தத்தை ரத்துச்செய்து, தற்போது சுவிஸர்லாந்து நிறுவனம் ஒன்றுடன் மேற்கொள்ளப்பட்டதாலே எரிவாயு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யுத்த நிலையே இதற்கான காரணம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
அதேநேரம் தற்போது ரஷ்யாவிடம் எரிபொருள் கேட்கிறோம். ஆனால் இந்தியா எங்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டும். ஏனெனில் ஈரான் கப்பல்கள் இரண்டை எமது பக்கம் தள்ளிவிட்டு இந்தியா தப்பித்துக்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்கியது இந்த அரசாங்கமாகும். அதனால் எமக்கும் ஒருதொகை எரிபொருள் வழங்குமாறு இந்தியாவுக்கு தெரிவிக்க வேண்டும். 5கப்பல்கள் இருந்த நிறுவனத்தை ரத்து செய்துவிட்டு, 2 கப்பல்கள் இருக்கும் நிறுவனத்துடன் எரிவாயு ஒப்பந்தம் செய்துகொண்டதாலே எரிபாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் அண்மையில் ஜனாதிபதி தலைமையில் இலங்கை போக்குவரத்து சபையில் 600 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. ஆனால் நியமனம் வழங்கிய கோப்புகளுக்குள் பலவருக்கு நியமனக் கடிதம் இலல்ை. போக்குவரத்து அமைச்சர் இதுதொடர்பில் தேடிப்பார்க்க வேண்டும். அதேபோன்று சமாதான நீதவான்கள் வைத்திய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனநீதி அமைச்சர் சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது. இது முறையல்ல.
மேலும் மேல் மாகாணத்தில் 10ஆயிரத்துக்கும் அதிகமான குற்றப்புலனாய்வு அதிகாரிகளை இடமாற்றி இருக்கிறது. இவ்வாறு புலனாய்வு அதிகாரிகளை இடமாற்றம் செய்திருப்பது தொடர்பில் பொலிஸ் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். குறைபாடுகள் இருக்குமானால் அதனை சரி செய்துகொள்ள வேண்டும். அரசாங்கம் எனும்போது பல்வேறு நெருக்கடிகள் வரலாம் அதன்போது அனைத்துக்கும் முகம்கொடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். தற்போது எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனை அரசாங்கம் எவ்வாறாவது முகாமைத்துவம் செய்துகொள்ள வேண்டும் என்றார்.





