வத்தளை – எலகந்த பகுதியில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக சந்தேகிக்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த மிளகாய் பொதிகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த களஞ்சியசாலை ஒன்றுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை சீல் வைத்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை தலைமையில் கம்பஹா மாவட்ட புலனாய்வு பிரிவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த களஞ்சியசாலையை நுகர்வோர் விவகார அதிகாரசபை தலைமையிலான அதிகாரிகள் ஆய்வுக்கு உடப்படுத்தும் போது களஞ்சியசாலை மூடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் அயலவர் ஒருவர் மூலம் குறித்த களஞ்சியசாலை திறக்கப்பட்டு ஆய்வுக்கு உடப்படுத்தப்பட்ட போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சுமார் 25 கிலோகிராம் எடையுள்ள 30 மிளகாய் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட உலர்ந்த மிளகாய் பொதிகளில் உற்பத்தி திகதி , காலாவதி திகதி மற்றும் எடை உள்ளிட்ட அத்தியாவசிய தகவல்கள் எவையும் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த உலர்ந்த மிளகாய் தொகுதிகள் ஏற்கனவே சந்தைக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் களஞ்சியசாலை உரிமையாளர் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




