எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் : இதுவரையான காலப்பகுதிக்குள் 1800 நோயாளர்கள் அடையாளம்

வருடாந்தம் எலிக்காய்ச்சலால் பாதிப்புக்குள்ளானவர்களாக சுமார் 13 ஆயிரம் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், கடந்த வருடம் மாத்திரம் இந்நோயால் 200 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1800 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில் சிறுபோக நெற்செய்கை மற்றும் நகர்ப்புறங்களில் எலிகள் பெருகியுள்ளமையினாலும் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவும் அபாயம் உள்ளதாக தொற்றுநோய்ப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் துஷானி தம்பரேரா எச்சரித்துள்ளார்.

எலிக்காய்ச்சல் பரவல் தொடர்பில் இன்று புதன்கிழமை (11) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே வைத்தியர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்போது பெரும்போக நெற்செய்கையின் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சிறுபோக நெற் பயிர்ச்செய்கையும் ஆரம்பமாக உள்ளது. ஆகையால் எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் அதிகரிக்கும் சாத்தியப்பாடுகள் உள்ளன. எலிகள் உள்ளிட்ட பாலூட்டி விலங்குகளின் மூலம் இந்த நோய்த்தொற்று பரவுகிறது. நோய்த்தொற்றுக்கு ஆளான எலிகளின் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும் லெப்டோஸ்பைரா எனப்படும் ஒருவகை பற்றீரியாவே மனிதர்களிடையே நோய்த்தொற்று ஏற்பட காரணமாக உள்ளது.

அந்த வகையில் நாட்டில் வருடாந்தம் எலிக்காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகிய சுமார் 13 ஆயிரம் நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். கடந்த வருடம் மாத்திரம் இந்நோய் தொற்றுக்காளாகிய 11,585 பேர் கண்டறியப்பட்டதுடன், 200 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1800 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். குறிப்பாக இரத்தினபுரி, காலி, கேகாலை, மொணராகலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

இந்நிலையிலேயே கொழும்பு, கண்டி உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் சுற்றுப்புற சூழலில் குப்பைகள் கொட்டப்படுவதனால் எலிகளின் பெருக்கமும் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் நகரங்களிலும் எலிக்காய்ச்சல் தொற்றுக்கு ஆளாகும் நோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்துள்ளது. 20 தொடக்கம் 60 வயதுக்கிடைப்பட்டவர்களே பெரும்பாலும் இந்த நோயால் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனினும் அண்மைய நாட்களாக சிறுவர்களும் தொற்றுக்குள்ளாவது அவதானிக்கப்பட்டுள்ளது.

பற்றீரியா பரவியுள்ள நீர்நிலைகள், சதுப்பு நிலங்களில் நடமாடுதல், விளையாடுதல், பயிர்ச்செய்கை மற்றும் அகழ்வு பணிகளில் ஈடுபடுவதன் மூலம் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆகையால் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் அவதானத்துடன் செயற்படுவது நல்லது. நோய்த்தொற்று அபாயமுள்ள நபர்கள் மற்றும் அப்பகுதிகளில் வசிப்போர் நோய்த்தொடர்பில் அவதானத்துடன் செயற்படவும் என்றார்.