ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

ஐசிசி  இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து இலங்கை அணி மீண்டுமொருமுறை வெளியேறியுள்ளமையானது, கிரிக்கெட்டை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏமாற்றமளிக்கும் விடயமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவரது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதில்  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“எங்கள் அனைவருக்கும் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டிற்கும் அப்பாற்பட்ட உணர்ச்சிகளின் தொகுப்பாகும். அது எமது தேசிய அடையாளத்தின் ஒரு பகுதியாகும். ஒழுக்கம், முன் ஆயத்தம் மற்றும் வலுவான வழிமுறைகளுடன் திறமைகளை ஒன்றிணைத்தமையினாலேயே, நாம் இரண்டு உலகக் கிண்ணங்களின் உரிமையாளர்களாகி  உலகளவில் பெருமையையும் கௌரவத்தையும் பெற்ற ஒரு அணியாக மாறினோம்.

இன்று நம்மிடம் உள்ள குறைபாடு திறமை அல்ல. மாறாக, முறையானதொரு ஒழுங்குமுறையை முன்னெடுத்துச்செல்லல்,  நீண்டகாலத் திட்டமிடல் மற்றும் சரியான மன மற்றும் உடல் வலிமையை வளர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை தயாரிக்காமல் இருப்பதாகும்.

இலங்கை கிரிக்கெட்டின் அடித்தளம் மிகவும் பலமானதாக இருக்கிறது. எமது பாடசாலை முறைமையிலும் உள்நாட்டுப் போட்டிகளிலும் திறமையான இளம் வீரர்களை உருவாக்குவதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இப்போது தேவைப்படுவது சரியான தொலைநோக்குடன், நிர்வாகத்தின் தொழில்சார் தன்மையைப் பேணிக்கொண்டு, விளையாட்டின் தலைமைத்துவத்தின் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதாகும்.

உயர்ந்த மட்டத்திலான ஒரு வெற்றி குறுகிய கால செயற்பாடுகளால் இடம்பெறுவதில்லை.  அது தொடர்ச்சியான பயிற்சி, பொறுப்புக்கூறல் மற்றும் முழு உலகக் கிண்ணத் தொடருக்கும் கொண்டுசெல்லும் தெளிவான திட்டமிடல் மூலம் இடம்பெறுவதாகும்.

விளையாட்டு வீரர்களுக்கு விளையாடுவதற்கான சரியான சூழலை நாம் உருவாக்க வேண்டும். நிர்வாகப் பிரிவால் ஸ்திரத்தன்மையையும் விளையாட்டின் சரியான திசையையும் உறுதிப்படுத்த வேண்டும். வீரர்கள் தமது உத்தியோகபூர்வ சீருடையின் பெறுமதியை பெருமையாகக் கருதி அதனை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும்.

மிக முக்கியமான விடயம் என்னவென்றால், அடுத்த தலைமுறைக்காக கிரிக்கெட் மீதான நம்பிக்கையை நாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். ஏனெனில், எமது பிள்ளைகளுக்கு கெளரவத்தை ஏற்படுத்தக்கூடிய ‘வீரர்களை மீண்டும் பெற வேண்டும். இலங்கை கிரிக்கெட்டிற்கு தேவையானது தற்காலிக திருத்தங்கள் அல்ல. மீண்டும் ஒழுங்கமைக்கவும், மீண்டும் கட்டியெழுப்பவும் மற்றும் தரநிலைகளை உயர்த்தவும் விளையாட்டிற்கு தைரியம் தேவைப்படுகிறது.

இந்த விளையாட்டு கிண்ணங்களை வெற்றிகொள்வது பற்றி மட்டும் அல்ல, அது நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் பதிந்துள்ள சிங்க அடையாளத்தின் பெருமையை மீண்டும் அடைந்துகொள்வதாகும்.