ஐ. நா. சனத்தொகை நிதியம் அவசர வேண்டுகோள் !

இலங்கையில் டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகளுக்குப் பின், பெண்கள் மற்றும் சிறுமியர்களின் உயிர், பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை ஆகியன மிகுந்த ஆபத்தில் உள்ளதால், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) அவசரமாக 8.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கோரிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.

நவம்பர் 28ஆம் திகதி ஏற்பட்ட புயல், இலங்கையின் 25 மாவட்டங்களிலும் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோரை பாதித்ததுடன், வீடுகளையும் சுகாதார நிலையங்களையும் சேதப்படுத்தி, இலட்சக்கணக்கான குடும்பங்களை இடம்பெயரச் செய்துள்ளது.

இந்தச் சூழலில், பெண்கள் மற்றும் சிறுமியர்கள் பலவகையான அதிகரித்த அபாயங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளுக்கான அணுகல் பாதிக்கப்பட்டுள்ளது,  பாலினஅடிப்படையிலான வன்முறை,  மனஅழுத்தம், பயம் மற்றும் அவநம்பிக்கை அதிகரித்தல் போன்றன காணப்படுகின்றன.

520,000 யுவதிகளும், 22,570 கர்ப்பிணிப் பெண்களும் 193,770 வயதான பெண்களும் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார நிலைய சேதம், வெள்ளநீர் மற்றும் இடிபாடுகளால் வீதிகள் அழிவடைதல் ஆகியவற்றால், அவசர பிரசவ சிகிச்சைகள் உட்பட பெண்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கான அணுகலை கடுமையாக கட்டுப்படுத்துகின்றன.

இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியுள்ள அவசர முகாம்களில் அதிக நெரிசல், பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகின்றது. இவை, குறிப்பாக இளம்பெண்கள், முதிய பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு பாலினஅடிப்படையிலான வன்முறை அபாயத்தை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சனத் தொகை நிதியத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் புந்த்சோ வாங்ஜெல் தெரிவிக்கையில்,

அவசரநிலை அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், 1,225 பெண்களுக்கான மற்றும் சுகாதார கிட்களை நாங்கள் விநியோகித்தோம். ஆனால் நெருக்கடி மோசமடைந்து வரும் நிலையில் உடனடி நடவடிக்கை அத்தியாவசியமாகிறது. 208,400 பெண்கள் மற்றும் சிறுமியர்களை இலக்கு வைத்து உதவி விரிவாக்கம் கோரப்பட்டுள்ளது என்றார்.

ஐக்கிய நாடுகள் சனத் தொகை நிதியத்தினால் பின்வரும் நிவாரண நடவடிக்கைகள் அவசரமாக விரைவுபடுத்துகிறது:

 

1. உயிர் காப்பதற்கான சுகாதார சேவைகள்

இடம்பெயர்ந்த பகுதிகளில் நடமாடும் சுகாதார முகாம்கள் நிறுவல்

தாய்மை கிட்கள், மரியாதைக் கிட்கள், பிரசவ உதவி ‘midwifery go-bags’ விநியோகம்

சேதமடைந்த சுகாதார நிலையங்களைப் புனரமைத்தல்

 

2. பெண்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள்

ஆபத்தில் உள்ள பெண்களுக்கு  நிதி உதவி

தற்காலிக முகாம்களின் பாதுகாப்பு ஆய்வுகள்

பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கான பாதுகாப்பான இடங்கள்

பாலினஅடிப்படையிலான வன்முறைக்கான பரிந்துரைச் சேவைகள் பலப்படுத்தல்

 

3. மனநலம் மற்றும் சமூக உளவியல் உதவி

வெள்ளத்தால் உண்டான இழப்பு, துயரம், மனஅழுத்தத்துக்கு ஆதரவு

சமூக உளவியல் சேவைகள் விரிவாக்கம்

 

8.3 மில்லியன் டொலர் கோரிக்கையில் 2.5 வீதம் மாத்திரமே தற்போது கிடைத்துள்ளதாகவும், உடனடி நிதியுதவி இல்லையெனில் முக்கிய சுகாதார பிரச்சினைகள் பாரதூரமாகும் எனவும் அதன் தாக்கத்தை பெண்கள் மற்றும் சிறுமியர்களே அதிகமாகச் சுமக்க வேண்டி வரும் என்றும் இதனால், சர்வதேச சமூகம், நன்கொடையாளர்கள், ஏனைய நாட்டு அரசுகள் அவசர நிதியுதவி வழங்க வேண்டுமென்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது.