இலங்கை ஐ.நா.வின் பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான மாநாட்டில் கையெழுத்திட்டிருப்பதால் அரசாங்கம் பழங்குடி மக்களின் உரிமைகளை தொடர்ந்து புறக்கணித்தால், வேடுவ சமூகத்தின் உரிமைகள் குறித்து ஐ.நா.விடம் முறையிட வேண்டி வரும் என வேடுவத் தலைவர் உருவரிகே வன்னிலா அத்தோ தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 9 ஆம் திகதி உலக பழங்குடி மக்களின் சர்வதேச தினத்தை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எமது கிராமத்திற்கு வந்திருந்த போது, பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான சட்டத் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்திருந்தார்.
ஆனால் அத்தகைய சட்ட திருத்த வரைபோ ஏற்பாடுகளோ செய்யும் எந்த அறிகுறியும் இல்லை என்றார். கடந்த அரசாங்கங்களும் எங்கள் பிரச்சினைகளைப் பற்றி எந்த தீர்வுகளையும் வழங்கவில்லை.
ஆரம்பத்தில், தற்போதைய அரசாங்கத்தின் மீது எங்களுக்கு ஓரளவு நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது அவர்கள் கடந்த அரசாங்கங்களைப் போலவே அதே பாதையைப் பின்பற்றுவார்களா என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
அரசாங்கம் எங்கள் உரிமைகளை தொடர்ந்து புறக்கணித்தால், ஐக்கிய நாடுகள் சபைக்கு முறைப்பாடு செய்ய வேண்டிவரும். இருப்பினும், இந்த அரசாங்கத்தின் மீது எங்களுக்கு சிறிது நம்பிக்கை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


