இலங்கையில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் நோக்கில், ஒக்ஸ்போர்ட் செஸ்டர் உயர்கல்வி நிறுவனத்தினால் (Oxford Chester University – OCU) 75 முழுமையான புலமைப்பரிசில்களை வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது.
கங்காராம விகாரையின் விகாராதிபதி கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பொலிஸ் மா அதிபரின் பங்குபற்றலுடன் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொலிஸ் சேவா வனிதா பிரிவின் தலைவி நில்மிணி நீடா பாலசூரியவும் கலந்துகொண்டார். நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு கௌரவம் அளிக்கும் வகையிலும், பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் கல்வி கற்கும் திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கையின் கல்வித்துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் கலாநிதி துஷான் ஹெட்டியாராச்சி வழங்கும் சிறப்பான பங்களிப்பு இதன்போது பாராட்டப்பட்டது. அஸ்ஸஜி தேரரின் வழிகாட்டலின் கீழ் ஒக்ஸ்போர்ட் செஸ்டர் நிறுவனம் முன்னெடுக்கும் இந்த சமூகப் பணி, நாட்டின் எதிர்காலக் கல்வி நிலையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், மேல் மாகாண கல்விச் செயலாளர் ருவான் பெரேரா, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (நிர்வாகம்) சஜீவ தர்மவர்தன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (பொலிஸ் தலைமையகம்) நாலக்க சில்வா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.















