கதிரியக்கத் தொழில்நுட்ப வல்லுநர்கள் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, குறித்த அதிகாரியைத் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி எதிர்வரும் 9 ஆம் திகதி  அரச கதிரியக்கத் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே அச்சங்கம் கடந்த மாதம் 21 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்ததுடன், ஜனவரி 28 ஆம் திகதி முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவும் தயாராகியிருந்தது.

இந்நிலையில், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன, இவ்விடயம் தொடர்பில் கூடிய விரைவில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

அத்தோடு, குறித்த வைத்தியரைப் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்குவது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும், இதுவரை விசாரணைகளின் சுயாதீனத்தைப் பேணுவதற்காக அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து, அரச கதிரியக்கத் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஏகமனதாக இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மாளிகாவத்தை விசேட சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சார்ள்ஸ் நுகவெலவுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அரச கதிரியக்கத் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் கடந்த 21 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. 28 ஆம் திகதி முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பும் பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டைத் தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

எனினும், பேச்சுவார்த்தையின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றேனும் இதுவரை செயற்படுத்தப்படவில்லை. விசாரணையின் இடைக்கால அறிக்கை பிரதி சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், அதிலுள்ள உத்தரவுகளைச் செயற்படுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அமைச்சின் உயர் அதிகாரிகள் அவற்றை கருத்திற்கொள்ளாது அலட்சியமாகச் செயற்படுகின்றனர். இந்நிலையில், திங்கட்கிழமை (2) இடம்பெற்ற நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீர்மானம் மேற்கொள்வதில் காலதாமதம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியும், தவறிழைப்போரைப் பாதுகாக்க முயலும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்தும் 9 ஆம் திகதி மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது  என்றார்.