கனடாவிடமிருந்து இலங்கைக்கு 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான அனர்த்த நிவாரண நிதியுதவி!

இலங்கையின் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக கனடா அரசாங்கம் 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஹெச்.இ. இசபெல் மார்ட்டின் (HE Isabelle Martin) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை அலுவலகத்தில் வைத்து சந்தித்து இந்த நிதியுதவியை கையளித்துள்ளார்.

இந்த நிதியுதவியில் 1.4 மில்லியன் டொலர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உணவு வசதிகளை வழங்குவதற்காக உலக உணவுத் திட்டத்திற்கு (WFP) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 350,000 டொலர்கள், நிவாரணப் பொருட்கள், அவசரகால தங்குமிடங்கள், நீர், சுகாதாரம் மற்றும் துப்புரவு சேவைகளை வழங்குவதற்காக, ‘வேர்ல்ட் விஷன் கனடா’ (World Vision Canada) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

215,000 டொலர்கள்,  கனடா செஞ்சிலுவைச் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் அவசரகால பேரிடர் உதவி நிதியத்தின் மூலம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய சுமார் 70,000 டொலர்கள், உள்ளூர் முயற்சிகளுக்கான கனடா நிதியத்தின் (Canada Fund for Local Initiatives) ஊடாக அவசரகால நிவாரணங்களை வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது.

கனடா மற்றும் இலங்கைக்கு இடையிலான வலுவான கூட்டாண்மையையும், மனிதாபிமான உதவிகள் மற்றும் மீள்தன்மை மீதான அர்ப்பணிப்பை இந்த அனர்த்த நிவாரண நிதியுதவி பிரதிபலிக்கிறது.