கபில சந்திரசேனவுக்கு மீண்டும் விளக்கமறியல்

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை ஏப்ரல் 02 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டப் பிரதிநிதிகள் முன்வைத்த  வாதங்களை கருத்தில் கொண்டு, பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஏர்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பாக 02 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கடந்த 12 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

2013 ஆம் ஆண்டில் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 விமானங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தின் போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்த சந்திரசேன, 16 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற சதி செய்ததாகவும், சிங்கப்பூரில் உள்ள வங்கிக் கணக்கு ஒன்றில் 1.45 மில்லியன் யூரோ பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்திரசேன, தனது மனைவியின் பெயரில் உருவாக்கிய போலி நிறுவனம் மூலம், இலஞ்சம் பெற்ற பணத்தை  தனது சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் செலுத்த ஏற்பாடு செய்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர்.