“கபில சந்திரசேன மீது அழுத்தம்” – சானக மாதுகொட

ஸ்ரீலங்கன் ஏயாலைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை அச்சுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் நாமல் ராஜபக்ஷ்வின் பெயரை கூறுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழுத்தம் கொடுத்துள்ளது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சானக மாதுகொட தெரிவித்தாரர்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) மத்திய கிழக்கின் போரினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெற்றவந்த நிலையில், ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவர் இதனை கூறினார்.

இதன்போது சானக மாதுகொட எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, கைதுசெய்யப்பட்டுள்ள கபில சந்திரசேகரவை அச்சுறுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் நாமல் ராஜபக்ஷ்வின் பெயரை கூறுவதற்கு அவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக நீதவான் நீதிமன்றத்தில் அவர் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். அவர் வழங்கிய வாக்குமூலத்தை நான் சபையில் முன்வைக்கின்றேன். அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தும் அழுத்தம் கொடுத்துமே மஹிந்த ராஜபக்ஷவினதும் நாமல் ராஜபக்ஷ்வினதும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.