களுத்துறையில் நடைபெற்ற சர்வதேச அவசர சிகிச்சை அல்ட்ரா சவுண்ட் மாநாடு

சர்வதேச அவசர சிகிச்சை அல்ட்ரா சவுண்ட் மாநாடு சுகாதார மற்றும்  வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் களுத்துறையில் நடைபெற்றது.

அவசர சிகிச்சை அல்ட்ரா சவுண்ட் பற்றிய சர்வதேச மாநாடு (ResUSS 2025) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ  தலைமையில், வியாழக்கிழமை காலையில் களுத்துறை, தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனத்தில்  இடம்பெற்றது.

களுத்துறை, நாகொட போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, இலங்கை மருத்துவ சங்கம், களுத்துறை மருத்துவ சங்கம் மற்றும் சர்வதேச அல்ட்ரா சவுண்ட் கல்வி நிறுவனம் ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவினால் ஏற்பாடு செய்யப்படும் நாட்டின் முதலாவது சர்வதேச அவசர சிகிச்சை அல்ட்ரா சவுண்ட் மாநாடு இதுவாகும். இம்மாநாட்டில், இலங்கையின் அவசர சிகிச்சை பிரிவினால் முதன் முதலாகத் தொகுக்கப்பட்ட ‘எமெர்ஜென்சியா’ (EMERGENCIA) என்னும் மருத்துவ சஞ்சிகை மற்றும் த ப்ரண்ட் லைன்  (The Front Line) எனும் இலத்திரனியல் பத்திரிகை ஆகியனவும் வெளியிடப்பட்டன.

பிராந்திய அவசர சிகிச்சை பிரிவுகளை மேம்படுத்துதல், மேம்படுத்தப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ நடைமுறைகளை ஊக்குவித்தல். உலகளாவிய தரங்களுக்கு  இணையான உயர்தர அவசர சிகிச்சையை  வழங்குவதற்கான மையங்களாக அவசர சிகிச்சை பிரிவுகளை நிலை நிறுத்துதல் மற்றும் அறிவுப்பரிமாற்றம் செய்தல் ஆகியவை தொடர்பில் இந்த மாநாட்டின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

இந்த மாநாட்டில், ஆஸ்திரேலியாவின் இப்ஸ்விச் வைத்தியசாலையின் அவசரகால சிகிச்சை பிரிவின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் கைலி பேக்கர், அவுஸ்திரேலியாவின் பியோனா ஸ்டான்லி வைத்தியசாலையின் அவசரகால சிகிச்சை நிபுணர் வைத்தியர் அட்ரியன் கௌடி மற்றும் மலேசியாவின் கோலாலம்பூர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்  ஜெசிகா ஆன் நாதன் ஆகியோர் சிறப்புறையாற்றியிருந்தனர்.

மேலும் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் தலைவர் விசேட வைத்தியர் மதுரங்கி ஆரியசிங்க, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் சுரந்தபெரேரா, களுத்துறை மருத்துவ சங்கத்தின்  தலைவர் விசேட வைத்தியர் நுவன் விஜயலத் உட்பட சர்வதேச மற்றும் உள்ளூர் பேச்சாளர்கள், நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை  வல்லுநர்கள் பலரும் இந்த மாநாட்டில்  பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.