காலாவதியான மருந்துகள் விற்பனை : நான்கு பேருக்கு தண்டப்பணம் விதிப்பு!

சிறுவர்களுக்கான காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தமை மற்றும் உரிமம் பெற்ற மருந்தக நிபுணர்கள் இன்றி மருந்தகங்களை நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கொழும்புப் பகுதியைச் சேர்ந்த மூன்று மருந்தக உரிமையாளர்களுக்கும் மற்றும் ஒரு மருந்தக நிபுணருக்கும் மாளிகாகந்த மேலதிக நீதிமன்ற நீதவானால் தலா சுமார் 250,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதம உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர் நெவில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை  மூன்று மருந்தக உரிமையாளர்களும், மருந்தக நிபுணரும் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மருதானை, கொழும்பு 15 மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளில் உள்ள மருந்தகங்களுடன் தொடர்புடையவர்களாவர்.

காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தமை, மருந்தக நிபுணர்கள் அல்லது உரிய உரிமங்கள் இன்றி மருந்தகங்களை நடத்தியமை, வைத்தியர்களின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகளை வழங்கியமை, பதிவு செய்யப்படாத மருந்துகளை சேமித்து வைத்திருந்தமை மற்றும் வைத்தியர்களுக்கான மாதிரி மருந்துகளை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த விதிமீறல்களின் கீழ் நான்கு தனித்தனி வழக்குகள் தாக்கல் செய்யப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.