கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மொறவெவ பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம், மஹதிவுள்வெவ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) அதிரடிப்படையினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசேட அதிரடிப்படையின் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி கிராண்ட்பாஸ், ஒருகொடவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து நபர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த பிரதான சந்தேக நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை தொடர்பாக ஏற்பட்ட நீண்டகாலப் பிரச்சினையே இந்த கொலைக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 21, 23, 25, 27 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் வெல்லம்பிட்டி மற்றும் கோவில்வத்தை ஆகிய பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக விசேட அதிரடிப்படையினர் மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கிராண்ட்பாஸ் பொலிஸாருடன் இணைந்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



