தமிழ் மக்களின் இனப்பரம்பலை அச்சுறுத்தும் வகையில், மகாவலி அதிகாரசபையின் (எல்) வலயத் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் “கிவுல் ஓயா” திட்டத்திற்கு எதிரான எதிர்ப்புப் பேரணியானது, இன்றைய தினம் வவுனியா வடக்கு – நெடுங்கேணியில் மக்கள் ஆதரவுடன் எழுச்சியாக நடைபெற்றது.
ஒருங்கிணைந்த தமிழ்க் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பேரணி, நெடுங்கேணி பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை சென்றடைந்தது.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் “கிவுல் ஓயா திட்டம் வேண்டாம்” என்பதை வலியுறுத்தும் கோஷங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், முழக்கங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் உணர்வுப்பூர்வமாகப் பங்கேற்றனர்.
தொடர்ந்து, இத்திட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றை ஒருங்கிணைந்த தமிழ்க் கட்சிகள் வவுனியா வடக்கு பிரதேச செயலரிடம் கையளித்தன.
இப்பேரணியில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.






