குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் அயினியாப்பிள்ளை முபாரக்கின் உத்தியோகபூர்வ அலுவலக அறை நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை 7.00 மணிக்கு திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரால்,கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் ஆலோசனைக்கு அமைய முத்திரையிட்டு (சீல் வைத்து) மூடப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இலஞ்சம் பெற்றார் என்ற குற்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதேச சபைத்தலைவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று புதன்கிழமை (17) பிரதேச சபையின் இந்த வருட வரவு செலவு திட்டத்தை முன்வைக்க சபைக்கு வர உள்ளார். இந்த சூழலில் வழக்கு விசாரணை முழுமையாக முடியவில்லை என்பதால் அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் அவர் செல்வதை தடுப்பதற்காக இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் பிரதேச சபைத்தலைவர் தமது கடமைகளை ஆற்ற தற்காலிகமாக வேறு ஒரு அறையை அவருக்கு வழங்கும்படி சபையின் செயலாளருக்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பணித்துள்ளார்.





