கைதான 22 தேரர்களின் பின்னணியிலிருந்து செயற்பட்ட முக்கிய நபர் அத்துருகிரிய பகுதியில் கைது

கடுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தாய்லாந்திலிருந்து வந்தபோது சுமார் 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளோடு கைதான 22 தேரர்கள் தொடர்பிலான விசாரணையில், குறித்த சம்பவத்தின் பின்னணியிலிருந்து செயற்பட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேக நபர் ஒருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் செவ்வாய்க்கிழமை (28) கைது செய்துள்ளனர்.

அத்துருகிரிய பகுதியில் வைத்து சந்திரகுமார் எனும் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.

குறித்த 22 தேரர்களும் போதைப்பொருளோடு கைது செய்யப்பட்ட பின்னர், அவர்களின் தாய்லாந்து பயணத்தை ஒழுங்கமைத்ததாகக் கூறப்படும் அங்குணகொலபெலஸ்ஸ அமிதானந்த தேரரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர். அதன் பின்னர் குறித்த 23 பேரிடமும் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளுக்கு அமைய பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, அமிதானந்த தேரரிடம் முன்னெடுத்த தகவல்களுக்கு அமைவாக சந்திரகுமார் எனும் நபர் தொடர்பில் தகவல்கள் வெளிப்பட்டதாகவும், அதன்படி அவரை செவ்வாய்க்கிழமை (28) அத்துருகிரியவில் வைத்து கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான 22 தேரர்களும் தாய்லாந்துக்கு சென்று வருவதற்கு முன்னர், கடந்த மார்ச் மாதம் 12 தேரர்கள் இவ்வாறு தாய்லாந்து சென்று வந்திருப்பதாகவும், அவர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகள் அமிதானந்த தேரரினால் கடந்த மார்ச் 20 ஆம் திகதி சந்திரகுமார் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தகவல் வெளிப்பட்டது. இந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் உள்ள மேலும் பலர் தொடர்பாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைக்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, குறித்த தேரர்களுக்கு தாய்லாந்து செல்லவும் அங்கு அவர்களுடைய செலவுகள் தொடர்பாகவும் காலியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே அனுசரணை வழங்கி இருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த வர்த்தகர் தற்போது நாட்டில் இல்லாத நிலையில் அவர் தாய்லாந்தில் தங்கி இருப்பதாக நம்பப்படுகிறது. இது தொடர்பாக அவதானம் செலுத்தி மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனை விட, குறித்த தேரர்கள் விடயத்தில் தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார். ஏழு நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ள நிலையில், அந்த உத்தரவு நிறைவு பெற்றதன் பின்னர் அதன் விசாரணை அறிக்கையை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.