எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஒருவர் கைது செய்யப்பட்டு எந்தளவு காலம் தடுத்துவைக்கப்பட்டாலும் அது அடிப்படை உரிமை மீறலாக கருதப்படுவதில்லை. எமது நாட்டின் இந்த பலவீனத்தன்மை மாற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசபள வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் 77ஆவது தின நிகழ்வு புதன்கிழமை (10) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது, இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உருவாகியதுடன், ஒரு பக்கத்தில் உலகம் பொருளாதார பலத்தை கொண்டுவருவதற்காக, பிற்காலத்தில் உலக வங்கியும் வேறு சர்வதே நிதியங்களும் உலகில் வீழ்ச்சியடைந்த நாடுகளை கட்டியெழுப்புவதற்காக இந்த நிறுவனங்கள் சர்வதேச ரீதியில் உருவாகின.
அவ்வாறு உருவாகிய நிறுனங்கள் இன்று உலகில் பாரிய நிலைமைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றன. அந்ததந்த நாடுகளின் பொருளாதார பலத்துக்கமைய மனித உரிமையை பாதுகாத்தல் உலகில் இடம்பெறுகிறதா என்ற கேள்விக்குரி உலகுக்கு முன்னால் இருக்கிறது. அவ்வாறான யுகத்திலே நாங்கள் மனித உரிமைகள் தினத்தை இன்று கொண்டாடுகிறோம்.
இலங்கையின் அரசியலமைப்பில், நபர் ஒருவரை கைது செய்வது, தடுத்து வைப்பது, ஏதாவது ஒரு விடயம் தொடர்பில் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கும்வரை கைதுசெய்து தடுத்துவைப்பது தண்டனை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது எமது அரசியலமைப்பில் மாத்திரமின்றி, இந்திய அரசியலமைப்பிலும் இந்த உறுப்புரை தெரிவிக்கப்பட்டிருக்கிறுது .
உதாரணமாக இலங்கையில் 100பேரை கைதுசெய்தால், இரண்டு பேரே குற்றவாளியாகின்றனர். 98பேர் விடுதலையாகின்றனர். அவ்வாறு என்றால்,இடம்பெறுகின்ற விசாரணை முறைமையில் எமது நாட்டில் அடிப்படை உரிமை மீறப்படுகிறது. எமது அண்டை நாடான இந்தியாவில், 100பேர் கைது செய்யப்பட்டால் 57, 58பேர் குற்றவாளியாகின்றனர். ஜப்பானில் 100பேர் கைது செய்யப்பட்டால் 98பேர் குற்றவாளியாகின்றனர். இரண்டுபேரே விடுதலையாகி செல்கின்றனர்.
அதேபோன்று குறிப்பாக இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் சர்வதேச ரீதியில் ஏற்பட்ட இவ்வாறான நிறுவனங்கள் இன்றைய உலக்கு பொருந்துகிறதா என்பதை நாங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும், அந்தந்த நாடுகளின் பொருளாதார பலத்துக்கமைய அடிப்படை உரிமைகள் உலகிலும் எமது நாட்டிலும் அனைத்து இடங்களிலும் மாற்றமடைந்து வருகிறது.இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இந்த நிலைமைகளில் இருந்து மீள்வதற்கு இந்த நிறுவனங்களில் இந்த விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவது முக்கியமாகும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அதேபோன்று எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஒருவர் கைது செய்யப்பட்டு 3 மாதம் 6மாதம் தடுத்து வைத்துக்கொண்டாலும் அல்லது விசாரணை முடியும்வரை தடுத்து வைத்துக்கொண்டாலும் நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை தடுத்து வைத்துக்கொண்டாலும் அது உரிமை மீறப்படுவதாக கருதப்படுவதில்லை. அதனால் எமது நாட்டின் இந்த பலவீனத்தன்மை மாற்றப்பட வேண்டும் அதுதொடர்பில் அனைத்து தரப்பினரதும் கவனம் திரும்பவேண்டும் என பிராத்திக்கிறேன் என்றார்.




