தொடராக ஓய்வின்றி, கொட்டும் மழையில் 34ஆவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எங்களை தனியார் தமிழ் செய்திப் பிரிவு ஊடகமொன்றிற்கு, பிரதமர் அலுவலக செயலாளர் தெரிவித்த மாற்றுக் கருத்து பெரும் கவலையளிக்கிறது என முத்துநகர் ஒன்றிணைந்த விவசாய சம்மேளன செயலாளர் சஹீலா சபூர்தீன் தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றின் தமிழ் செய்திப் பிரிவு வானொலிக்கு தொலைபேசி ஊடாக நேற்று (19)பிரதமர் செயலகத்தின் செயலாளர் தெரிவித்த கருத்து தொடர்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
முத்து நகர் விவசாயிகள் இன்றுடன் (20) 34ஆவது நாளாக திருகோணமலையில் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டு, அந்நிலங்கள் சூரிய மின்சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் பிரதமரை நேரில் சந்தித்து கொழும்பில் உரையாடினோம். அப்போது அகில இலங்கை விவசாய சம்மேளன செயலாளரும் உடனிருந்தார். விவசாயிகளின் பிரச்சினைகளை நேரில் சந்தித்து பிரதமரின் செயலாளர் ஆராய வேண்டும்.
திருகோணமலைக்கு அண்மைய விஜயத்தின் போது எங்களுடன் பேசவில்லை. உயரதிகாரிகளுடன் பேசிவிட்டு தான் எங்கள் மூவரை அன்று மாலை 4 மணிக்கு அழைத்தார்கள். எங்களுடன் பேசாமல் அங்குள்ள ரொசான் எம்.பியுடன் தான் பேசினார். அந்தத் தருணத்தில் வீதியோர போராட்டத்தில் ஈடுபட்டோம்.
விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தருவதாக கூறினார். இதனை ரொசான் எம்.பி மொழிபெயர்த்தார். அவர்களுடைய முடிவை தெரிவித்தார். எங்களுடன் பேசவில்லை. உண்மைத்தன்மையை இவர்கள் உப்புவெளி கமநல சேவைகள் திணைக்களத்தின் ஊடாக எமது விவசாயிகளின் விபரங்களை பெறலாம். அப்பட்டமான கதைகளை கூறவேண்டாம். தனிப்பட்ட பிரச்சினை அப்படி இப்படி என கூறும் செயலாளரின் கருத்து கவலையளிக்கிறது. மூன்று சம்மேளன விவசாயிகள் சூழற்சி முறையில் போராடி வருகிறோம். விவசாயிகளின் 352 குடும்பங்களுக்கும் தீர்வினை சரியாக வழங்க வேண்டும். ஊழலற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்பதற்கு எங்களது ஒத்துழைப்பு இருக்கும்.
கொழும்பில் இருந்து விவசாய பசளை அதற்கான பணத்தை செலுத்தும். நீங்கள் மாற்றுக்கருத்து வெளியிடுவதை ஏற்க முடியாது. விவசாயிகளை விற்க ஒரு வகை நாடக பாணியில் சிலர் கையூட்டலை செய்துள்ளார்கள்.
நகர அபிவிருத்தி, கமநல சேவைகள் திணைக்களம் ஊடாக உண்மைத்தன்மையை நீங்கள் பெறலாம். உண்மையில் இலஞ்ச ஊழல் அற்ற அதிகாரியாக இருந்தால் உண்மைத்தன்மையுடன் செயற்படுங்கள். மூன்று சம்மேளன பிரதிநிதிகளை கொழும்புக்கு பிரதமர் காரியாலயத்துக்கு அழையுங்கள். ஆதாரங்களுடனும் ஆவணத்துடனும் வருகிறோம் என சம்மேளன செயலாளர் தெரிவித்துள்ளார்.