கோட்டாபய ராஜபக்ஷிடம் இலஞ்ச ஆணைக்குழு இரு மணிநேரம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடித் தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை (17) அவரிடம் விசேட விசாரணை ஒன்றினை நடத்தியது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய, செவ்வாய்க்கிழமை முற்பகல் கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் விசாரணைகளை நடத்தியதாக குறித்த ஆணைக்குழு தெரிவித்தது. கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்த பின்னர், அவர் அங்கிருந்து வெளியேறிச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் இருந்த காலப்பகுதியில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வீடமைப்புத் திட்டங்கள் அமைக்கப்பட்டு, அந்த வீடமைப்புத் திட்டங்களில் உள்ள வீடுகள் பயனாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்து நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் ஒரு அங்கமாகவே கோட்டாபய ராஜபக்ஷவை அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்தது.