கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு தொடர்பில் சட்டமா அதிபர் நீதிமன்றில் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய கோட்டாபய ராஜபக்‌ஷவை  கைது செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக, சட்டமா அதிபர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்மனுதாரர்களிடம் இருந்து இதுவரையில் தமக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களும் கிடைக்கப் பெறவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைத்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தம்மைக் கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு இன்று (17) புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் தரப்பில் இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.