சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு அருகில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றினை 30.03.2026இன்று ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் முன்னெடுத்துள்ள இந்த சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு எதிரான கவனயீர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் குறித்த தொடர்கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அண்மைக்காலமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் மற்றும் கடற்றொழில் அமைச்சர் என உரியதரப்பினர்களிடம் பலதடவைகள் முறையிட்டுள்ளபோதும் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த உரியதரப்பினர் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அத்தோடு இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளரிடம் முறையிட்டபோது, குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தம்மிடம் போதிய ஆளணி வசதிகள் இல்லையெனத் தெரிவித்ததுடன், எனவே தம்மால் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தமுடியாதெனத் தெரிவித்ததாகவும் மீனவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இத்தகைய சூழலில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்துள்ளதால் தமது வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்துள்ள குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை முற்றாக கட்டுப்படுத்த வலியுறுத்தியே முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து இவ்வாறாக தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அவர்களும் இந்த தொடர் எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றுள்ளார்.
அத்தோடு நாளையதினம் செவ்வாய்க்கிழமை (31) முல்லைத்தீவிற்கு கடற்றொழில் அமைச்சர் வருகைதரவுள்ளதாக கூறப்படும் நிலையில், அவ்வாறு வருகைதருகின்ற கடற்றொழில் அமைச்சர் முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தமக்கு முறையான தீர்வினை வழங்கவேண்டுமென மீனவர்களால் இதன்போது தெரிவிக்கப்பட்டது. தவறினால் தமது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனம் மீனவர்களால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை கடந்த 20.03.2026அன்று முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறும், முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்திலுள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறும் நாடாளுமன்றில் கடற்றொழில் அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.
மேலும் இவ்வாறு கடற்றொழிலாளர்களால் தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவரும் இடத்திற்கு அதிகளவான பொலிசார் பேருந்தில் வரவளைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














