தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய அழுத்தங்களை நோர்வே பிரயோகிக்கவேண்டும் எனவும், குறைந்தபட்சம் சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல என்ற நிலைப்பாட்டையேனும் நோர்வே வெளிப்படுத்தவேண்டும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் உயர்மட்டப் பிரதிநிதியிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் வலியுறுத்தியுள்ளனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இம்மாதத் தொடக்கம் முதல் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டு, அங்கு பலதரப்பட்ட சந்திப்புக்களை நடாத்தி வருகின்றனர்.
அதன்படி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தலைமையில் அதன் செயலாளர் செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கைபரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் நோர்வே வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரியை சந்தித்து, உள்நாட்டில் தமிழர்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் மற்றும் தீர்வு எதிர்பார்க்கை குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.
இதன்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி மற்றும் தமது சமஷ்டி தீர்வுக்கான கோரிக்கை என்பன தொடர்பில் நோர்வே வெளிவிவகார அமைச்சின் அதிகாரியிடம் விரிவாக விளக்கமளித்தனர். அதனை செவிமடுத்த அதிகாரி, தீர்வு விடயத்தில் தாம் நடுநிலையான போக்கையே கடைப்பிடிப்பதாகப் பதிலளித்தார்.
அதனை நிராகரித்த கஜேந்திரகுமார் தரப்பு, இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் நோர்வே உள்ளிட்ட உலகநாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் சமஷ்டி தீர்வுக்கு இணங்காமல், தனிநாட்டையே கோருகின்றனர் என்ற அடிப்படையில் அல்லவா பின்னர் யுத்தத்தை ஆதரித்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியதுடன், குறைந்தபட்சம் சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல என்ற நிலைப்பாட்டையேனும் நோர்வே வெளிப்படுத்தவேண்டும் என வலியுறுத்தினர்.
அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கான புதிய சட்ட வரைவு, வட, கிழக்கு மாகாணங்களில் தொடரும் பௌத்த மற்றும் இராணுவமயமாக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் நோர்வே அதிகாரிக்கு அவர்கள் விளக்கமளித்தனர்.
அதனையடுத்து டென்மார்க் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரியுடன் நடைபெற்ற சந்திப்பிலும் இவ்விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.
இது இவ்வாறிருக்க, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீண்டும் நாடு திரும்பியுள்ள போதிலும், கட்சியின் ஏனைய பிரதிநிதிகள் எதிர்வரும் தினங்களில் பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்ஸர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இவ்வாறான உயர்மட்ட மற்றும் மக்கள் சந்திப்புக்களை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




