சாவகச்சேரி நகர சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு எதிராக வட மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசேட தனிநபர் விசாரணை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது.ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி க. அரியநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையில், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் நகர சபைச் செயலாளர் ஆகியோர் சாட்சியமளித்தனர்.
இன்றைய விசாரணையில், இரண்டாம் குற்றஞ்சாட்டப்பட்டவரான உப தவிசாளர் ஞா. கிஷோர் சார்பில் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகி வாதாடினார்.கடந்த ஜனவரி 20ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில், 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைய கட்டடங்களுக்கு தகுதிச் சான்றிதழ் கோருவது குறித்து உப தவிசாளர் விமர்சித்திருந்தார்.
இந்த உரை உள்ளூராட்சி ஆணையாளரின்அறிவுறுத்தலை மீறியது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மையமாகக் கொண்டு இன்றைய வாதங்கள் நடைபெற்றன.உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார வரம்புக்குட்பட்ட விடயங்கள் குறித்து பேசுவதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு முழு உரிமை உண்டு என சட்டத்தரணி குருபரன் வாதிட்டார். பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் நலனை கருத்தில் கொண்டு பேசுவது ஒரு உறுப்பினரின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், உப தவிசாளர் எந்த அதிகாரியையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றும், பொதுக் கொள்கைகளைச் சரியான திசையில் கொண்டு செல்லும் நோக்கத்திலேயே அவர் கருத்து வெளியிட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.தவிசாளர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சட்டத்தரணி, உப தவிசாளரின் பேச்சைக் கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டை மறுத்தார்.
மேலும், நகர சபை நிர்வாகத்தை நீக்கும் முயற்சிகளுக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் வெளியிட்டார்.இந்நிலையில், அனைத்து சாட்சி விசாரணைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு வாரத்திற்குள் எழுத்துமூல சமர்ப்பணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் விசாரணை அதிகாரி க. அரியநாயகம் தனது இறுதி அறிக்கையை வட மாகாண ஆளுநரிடம் சமர்ப்பிக்கவுள்ளார்





