சிறிலங்கா ஜனாதிபதி அண்மைய உரை தூரநோக்கற்றது!

தற்போது உலக அளவில் உருவாகியுள்ள ஏகாதிபத்திய யுத்த நிலைமை இலங்கையின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தைச் செலுத்தும் என்பதை அரசாங்கம் சரியாகக் கணிப்பிடவில்லை எனவும் இந்த யுத்தம் குறித்து எவ்வித சரியான மதிப்பீடுகளும் இன்றிச் சில வாரங்களுக்கான திட்டங்களையே ஜனாதிபதி முன்வைத்துள்மை அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானங்கள் நாட்டை மீளவும் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் வெகுஜன செயலாளர் துமிந்த நாகமுவ குற்றம் சாட்டியள்ளார்.

ஏகாதிபத்திய யுத்தச் சூழல் மற்றும் அதனால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாரிய பொருளாதார அரசியல் பாதிப்புகள் குறித்துத் தெளிவுபடுத்துவதற்காக முன்னிலை சோசலிசக் கட்சியினால் நுகேகொடையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று வியாழக்கிழமை (19) பிற்பகல் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

ஜனாதிபதி அண்மையில் தமக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களை அழைத்து எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தொடர்பில் ஆற்றிய உரை எவ்வித தூரநோக்கும் அற்றதாகும். குறிப்பாக பாரிய அளவிலான வர்த்தகர்கள் தமது டொலர் இருப்புகளைப் பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதாக ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனை நாட்டுக்குள் ஒரு கறுப்புப் பொருளாதாரத்தையே உருவாக்கும். நாட்டின் டொலர் புழக்கமானது மத்திய வங்கியின் நேரடி கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இவ்வாறே உண்டியல் முறைகள் குறித்துக் கருத்து வெளியிட்டிருந்தார். தற்போது ஜனாதிபதியின் அறிவிப்பைத் தொடர்ந்து 12 பெரும் கம்பெனிகள் எரிபொருள் இறக்குமதிக்குத் தயாராகியுள்ளன.

தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியில் உழைத்து நாட்டுக்கு அனுப்ப வேண்டிய டொலர்களைத் தான் இந்த வர்த்தகர்கள் மோசடி செய்து வைத்துள்ளனர். கடந்த 2007 முதல் 2017 வரையான காலப்பகுதியில் மாத்திரம் இத்தகைய வர்த்தகர்கள் வருடாந்தம் 4 பில்லியன் டொலர்களைச் சட்டவிரோதமாக நாட்டுக்கு வெளியே வைப்பிலிட்டுள்ளதாக அரசாங்க அறிக்கைகளே கூறுகின்றன. அத்தகைய கறுப்புப் பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவதற்குச் சட்டங்களை இயற்றுவதற்குப் பதிலாக இந்தத் திருடர்களுக்கு மேலும் இலாபம் ஈட்டிக்கொடுக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இந்தத் தீர்மானத்தின் ஊடாக நாட்டில் ஒரு சில வர்த்தகப் பிரமுகர்களின் ஆதிக்கம் தலைதூக்கும் என்பதுடன் அவர்கள் அரசாங்கத்திற்கு மேலதிகமான ஒரு அதிகார மையத்தை உருவாக்கி நாட்டின் எரிபொருள் விலை மற்றும் விநியோகத்தைத் தீர்மானிக்கும் அபாயம் உள்ளது. கடந்த ஒன்றரை வருட காலமாக நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அல்லது சேமிப்பு முனையங்களை அறிவுரைகூறி புனரமைக்க அரசாங்கம் எவ்வித விலை மனு கோரல்களையும் முன்னெடுக்கவில்லை.

எரிபொருள் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி பாடசாலைகளை மூடிவிட்டு மீண்டும் இணையவழி கல்வியை ஆரம்பிக்க அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. கடந்த காலங்களில் இணையவழி கல்வியால் மாணவர்களின் ஆளுமைக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு இத்தகைய தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். எரிபொருள் நெருக்கடி காணப்படுமாயின் மாணவர்களை அருகிலுள்ள பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை வகுக்க வேண்டும். சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கி டொலர்களை விரயம் செய்த அரசாங்கம் அதன் விளைவுகளைப் பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது.

எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய வறட்சி நிலை மற்றும் உலகளாவிய அரசியல் பதற்றங்களால் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் அரசாங்கம் இப்போதே முறையான உணவு இருப்புகளைச் சேகரிக்க வேண்டும். சீனா அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஏகாதிபத்திய அதிகாரப் போட்டியில் இலங்கை எவ்வித தரப்புடனும் இணையாமல் அணிசேரா கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி வர்த்தக சமூகத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராக நாட்டு மக்களைத் திரட்டிப் பாரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.