சிறுவர்களை உடல் ரீதியாக தண்டிப்பதை நிறுத்துங்கள்!

சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்காக உடல் மற்றும் உள ரீதியான தண்டனைகளை வழங்குவதை விடுத்து, நேர்மறையான ஒழுக்க முறைகளைக் கையாளுமாறு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களிடம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏப்ரல் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உடல் ரீதியான தண்டனைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல தசாப்தங்களாக இலங்கையில் சிறுவர்களை ஒழுக்கப்படுத்த உடல் ரீதியான தண்டனைகளை வழங்குவது ஒரு சாதாரண சமூக மற்றும் கலாசார விடயமாகப் பார்க்கப்படுகிறது. எனினும், இத்தகைய தண்டனைகள் சிறுவர்களின் ஆளுமையில் குறுகிய கால மற்றும் நீண்ட கால ரீதியாக பாரிய எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பிரகடனத்தின் 19 ஆவது பிரிவின் கீழ், வன்முறைகளிலிருந்து பாதுகாக்கப்பட சிறுவர்களுக்கு உரிமை உண்டு என்பதுடன், இலங்கை 1990 முதல் இதற்கு சர்வதேச ரீதியாகக் கட்டுப்பட்டுள்ளது. மேலும், இலங்கையின் அரசியலமைப்பின் 11 ஆவது பிரிவின்படி, எவருக்கும் சித்திரவதை அல்லது அமானுஷ்ய தண்டனை வழங்கப்படக் கூடாது என்பது அடிப்படை உரிமையாகும்.

தண்டனைச் சட்டக்கோவையின் 308 (அ) பிரிவு மற்றும் கல்வி அமைச்சின் 12/2016, 11/2026 ஆகிய சுற்றறிக்கைகள் மூலம் பாடசாலைகளில் உடல் அல்லது உள ரீதியான வன்முறைகள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அமைச்சர்களின் உலக மாநாட்டில், சிறுவர்களுக்கு எதிரான உடல் ரீதியான தண்டனைகளைத் தடை செய்வதாக இலங்கை சர்வதேச ரீதியில் உறுதியளித்துள்ளது. இதனை வலுப்படுத்த, ஆசிரியர்களுக்கு நேர்மறையான ஒழுக்க முறைகள் குறித்த பயிற்சிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைக்கும் முறைப்பாடுகளில் இரண்டாவது அதிகூடிய வகை உடல் வன்முறை தொடர்பானதாகும். வருடாந்தம் 2,000 முதல் 2,500 வரையான முறைப்பாடுகள் பதிவாகின்றன.

இதனைத் தடுக்க மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து அதிகாரசபை தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. சிறுவர்கள் அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் பாதுகாப்பாக இருப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவது நம் அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும் என்றுள்ளது.