சிலாபத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: சமூக ஊடக காணொளியால் சிக்கிய இருவர் கைது!

சமூக ஊடகங்களில் பரவி வந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படும் காணொளி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சிலாபத்தைச் சேர்ந்த இருவர் பெரிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காக்கப்பள்ளி சந்தியில் அமைந்துள்ள சலூன் ஒன்றிற்கு வந்த சிறுவன் ஒருவனுக்குப் பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பான காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

குறித்த காணொளி தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார தலைமையகத்தின் 109 என்ற அவசர இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிலாபம் தலைமையகப் பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது.

இந்தச் சம்பவம் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  இடம்பெற்றமை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

விசாரணைகளைத் தொடர்ந்து, இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் நேற்று சனிக்கிழமை (21) காக்கப்பள்ளி மற்றும் பண்டாரவத்தை ஆகிய பகுதிகளில் வைத்து சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 54 மற்றும் 58 வயதுடையவர்கள் எனவும், காக்கப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இச்சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.