சீரற்ற வானிலையால் பாரிய வாழ்வாதாரப் பாதிப்பை எதிர்நோக்கும் முத்து ஐயன்கட்டுகுள நன்னீர் மீனவர்கள்

அண்மைக்காலத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையினால்  முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுகுளம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பின் அங்கத்துவக்குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாகப்பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு இதுவரை இழப்பீடுகளோ நிவாரணங்களோ வழங்கப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பினர் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் முத்து ஐயன்கட்டு குளம் நன்னீர் கிராமிய அமைப்பின் முறையீட்டையடுத்து, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நன்னீர் மீன்பிடியாளர்களின் பாதிப்பு நிலமைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்ததுடன், குறித்த நன்னீர் மீனவ அமைப்பினரிடமிருந்து கோரிக்கைக் கடிதங்களைப் பெற்றுக்கெண்டார். அத்தோடு மீனவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அண்மையில் நிலவிய சீரற்ற வானிலையினால் முத்துஐயன்கட்டு குளத்தின் கரையில் பாதுகாப்பாக கட்டிவைக்கப்பட்டிருந்த, முத்துஐயன்கட்டுக்குளம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பிற்குரிய 15 சிறிய படகுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், மீன்பிடி வலைகள் குளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும்  இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

அதேவேளை முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததையடுத்து வான்கதவுகள் தூக்கப்பட்டநிலையில், குளத்தில் விடப்பட்டிருந்த மீன்குஞ்சுகள் மற்றும் பெரிய மீன்கள் என்பன வான்கதவுகளினூடாக வெளியேறியுள்ளதாகவும் இதன்போது நன்னீர் மீனவ நாடாளுமன்ற உறுப்பினரது கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

குறிப்பாக முத்துஐயன்கட்டுக்குளத்தில் ஒரு வருடகாலமாக மீன்குஞ்சுகள் விடப்படாதநிலையில், குறித்த நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பின் பயனாளிகளிடமிருந்து பணத்தினை அறவிட்டு இந்த வருட ஆரம்பத்தில் மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டிருந்ததாக நன்னீர் மீன்பிடியாளர்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாறு விடப்பட்ட மீன்குஞ்சுகள் வான் கதவுகளினூடாக வெளியேறியுள்ள நிலையில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் முத்துஐயன்கட்டு குளம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பில் அங்கத்துவம் பெறுகின்ற 101அங்கத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களால் தெரிவிக்கப்பட்டதுடன், தற்போது ஒரு பயனாளி 1கிலோ தொடக்கம் 02கிலோ வரையிலான மீன்களையே பிடிக்கக்கூடிய நிலைகாணப்படுவதாகவும் நன்னீர் மீன்பிடியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிட்டனர்.

இவ்வாறாக படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் குளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதுடன், குளத்தில் விடப்பட்ட மீன்குஞ்சுகளும் வான்கதவுகளினூடாக வெளியேறியுள்ளநிலையில் தமது அன்றாட வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முத்துஐயன்கட்டுகுளம் நன்னீர் மீனவர்கள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்ததுடன், இவ்வாறாக பாரிய வாழ்வாதாரப் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ள தமக்கு இதுவரை நிவாரணங்களையோ, இழப்பிடுகளையோ வழங்குவதற்கு உரியதரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்வில்லைஎனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின்   கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அதேவேளை, ஒட்டுசுட்டானுக்கு செல்வதற்குரிய வீதியும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் தாம் பல்வேறு போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவருவதாகவும் இதன்போது நடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த மீனவ அமைப்பினரின் பிரச்சினைகளைச் செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், மீனவ அமைப்பினரிடமிருந்து கோரிக்கைக் கடிதங்களையும் பெற்றுக்கொண்டார்.

அதேவேளை, மீனவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதார நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெருக்கடிகள் தொடர்பாக உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்து நெருகடிகளைத் தீர்ப்பது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.