செம்மணி புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, மழை அங்கியை ஒத்த ஆடையுடன் கூடிய சிறுவன் ஒருவரின் எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அதன் 41ஆவது நாள் அகழ்வுப் பணிகள் வியாழக்கிழமை (23) இடம்பெற்றன. இதன்போது மேலும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் 9 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், வியாழக்கிழமை (23) அகழ்வுப் பணிகளின் போது மூன்று எலும்புக் குவியல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், ஆணிகள் மற்றும் சிமெந்துத் துண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை 95 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, மொத்தமாக 478 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 464 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், அடையாளம் காணப்பட்ட 467ஆவது எலும்புக்கூடு இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகவும் வித்தியாசமான நிலையில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அந்த எலும்புக்கூட்டுடன் சவப்பெட்டியின் அடையாளங்கள், மழைக்காலங்களில் பயன்படுத்தப்படும் மழை அங்கி (Raincoat) மற்றும் காலுறைகள் (Socks) என்பன காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், குறித்த நபர் சட்டரீதியான முறையில் அடக்கம் செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து நீதிமன்றம் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை வெள்ளிக்கிழமை (24) வெளியிட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்