கண்டி, பேராதனை பகுதியில் கடையொன்றில் சிறிய சொக்லேட் பக்கற்றை திருடிய 67 வயதுடைய முதியவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலையை இருவர் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளரும் அவரது ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் பேராதனையில் உள்ள ஈரியகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் பிள்ளைகள் திருமணமாகி வேறு பகுதிகளில் குடியேறிய பின்னர் அவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
குறித்த நபர் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு கடைக்குச் சென்றுள்ளார். கடையில் இருந்த இரண்டு பேர் அவரை கடைக்குள் இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர்.
ஏனெனில் அவர் முன்தினம் கடையில் சொக்லேட்டுகளை திருடும் காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது.
ஆரம்ப கட்ட விசாரணையில், அவரிடம் சொக்லேட் வாங்கும் அளவிற்கு பணம் அவரிடம் இருந்திருக்க வில்லை. இதனால் சொக்லேட் பிரியரான அவர் திருடியுள்ளார். அவர் வழமையாக கடைக்குச் செல்லும் போது தனக்கும் அவரது மனைவிக்கும் சொக்லேட்கள் வாங்கி வரும் பழக்கம் அவருக்கு இருந்துள்ளது.
சந்தேகநபர்கள் தாக்குதலுக்குள்ளான முதியவரை கடை மூடும் நேரம் வரை உள்ளே வைத்திருந்து வீதியில் விட்டுச் சென்றுள்ளனர்.
அவ் வழியூடாக சென்ற பெண்ணொருவர் அவரை அடையாளம் கண்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மரணப்படுக்கையில் இருந்த அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பேராதனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜித விஜேகோனின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப்பிரிவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சீவ மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.


