டித்வா புயல் வீட்டு இழப்பீடு : ஜனாதிபதி செயலணி 16ஆம் திகதி கூடுகிறது

தித்வா  புயல் தாக்கத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி செயலணியின் உபகுழு எதிர்வரும் 16 ஆம் திகதி  கூடவுள்ளது. நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கல் 80 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளது என  வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தித்வா புயல் தாக்கம் மற்றும் பேரிடர் தாக்கங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு வழிமுறைகளில் நிவாரணம் மற்றும் இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன. கால்நடை வளர்ப்பார்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கு விவசாயத்துறை மற்றும் கால்நடை வளர்ப்பு அமைச்சின் ஊடாக நிவாரணம் வழங்கப்படுகிறது.

சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு  கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆகவே பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் அனைவருக்கும் அமைச்சு மட்டத்தில் நிவாரணம் வழங்கப்படுகிறது.

அனர்த்தத்தால் வீடுகளை இழந்தோருக்கு கட்டம் கட்டமாக நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதுவரையில் 2000 பேருக்கு முழுமையாக நிவாரணமளிக்கப்பட்டுள்ளது. ஏனைய தரப்பினருக்கும் வெகுவிரைவில் நிவாரணம் வழங்கப்படும்.

வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலணியின் உபகுழு மேற்கொள்கிறது. இதற்கமைய இந்த குழு நாளை மறுதினம் (16) ஜனாதிபதி செயலகத்தில் கூடவுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள சகலருக்கு முழுமையாக இழப்பீடு வழங்கப்படும் என்றார்.

சமீபத்திய செய்திகள்