இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 90,306ஆக உயர்ந்துள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் வழங்கிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில், நாடு முழுவதிலும் மொத்தம் 65 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
நோயினால் ஏற்படும் இறப்பு விகிதம் 0.07%ஆக உள்ளது. இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர்.
ஜூலையில் 29,973 நோயாளர்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, ஆகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 4,959 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் பதிவான மொத்த நோயாளர்களில் மேல் மாகாணத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் 52.96 வீதமளவில் (47,824 நோயாளர்கள்) அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதையடுத்து, தென் மாகாணத்தில் 13,361 நோயாளர்களும் மத்திய மாகாணத்தில் 8,027 நோயாளர்களும் உள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டமே டெங்கு நோய் பரவலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 19,204 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதைத் தவிர, கொழும்பு மாவட்டத்தில் 17,955 நோயாளர்களும் கண்டி மாவட்டத்தில் 6,413 நோயாளர்களும் மாத்தறை மாவட்டத்தில் 5,971 நோயாளர்களும் களுத்துறை மாவட்டத்தில் 5,871 நோயாளர்களும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.





