தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி – துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஹெவலோக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதன்கிழமை (5) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அத்தோடு குறித்த துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவத்தில் மற்றொரு சந்தேகநபரான ஐகுல் ஜெரக்ஷினா என்பவருக்கு எதிராகவும் புதன்கிழமை (5) சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஹெவலோக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கைதுசெய்யப்பட்டு கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

எவ்வாறெனினும் கடந்த வருடம் ஜூலை மாதம் 29 ஆம் திகதி இந்தச் சம்பவத்தில் சந்தேகநபருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புள்ளதை உறுதிப்படுத்துவதற்குப் போதியளவான சாட்சியங்கள் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் அப்போதைய கல்கிஸ்ஸை நீதிவான் சத்துரிக்கா த சில்வா அவரை பிணையில் விடுவித்திருந்தார்.

இந்நிலையில் துமிந்த திஸாநாயக்கவை சந்தேகநபராகப் பெயர் குறிப்பிடுவதற்குப் போதியளவான சாட்சியங்கள் உள்ளதாகச் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியதன் பின்னர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையைப் பரிசீலித்த, கல்கிஸ்ஸை நீதிவான் காஞ்சனா என். சில்வா, ஜூலை 7 ஆம் திகதியன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு கடந்த ஜூன் 19 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற சாட்சியங்களைப் பரிசீலித்த பின்னர் சட்டமா அதிபர் சந்தேகநபரான துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக புதன்கிழமை (5) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையினைத் தாக்கல் செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்