இலங்கைத் தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைந்து பயணிப்பதாக இருந்தால் பொதுக்கட்டமைப்பை உருவாக்குதல், பொதுச்சின்னத்தைப் பயன்படுத்தல் ஆகிய விடயத்தில் தெளிவானதொரு ஏகோபித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியானது தற்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உத்தியோக பூர்வமான முடிவுக்காக காத்திருப்பதாக அதன் உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவின் பின்னர் தொடர்ச்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதன்விளைவாக மாதந்தம் இருதரப்புச் சந்திப்புக்களும் நீடித்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில் இறுதியாக நல்லூரில் உள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் அலுவலகத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும், தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றிருந்தது.
இந்தச் சந்திப்பின்போது, இலங்கைத் தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணைந்து செயற்படுவதற்கான பொதுக்கட்டமைப்பை உருவாக்குதல், பொதுச்சின்னத்தின் அடிப்படையில் கூட்டணியை அறிவித்தல், அதன் பெயர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தொடர்வதில் பிரச்சினைகள் இல்லை ஆகிய விடயங்கள் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இச்சமயத்தில் இவ்விடயம் சம்பந்தமாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தினைக் கூட்டி தீர்மானம் எடுத்ததன் பின்னர் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த விடயம் சம்பந்தமாக ஆராய்வதற்காக இன்னமும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கூட்டப்படவில்லை என்பதோடு ஆறு மாதகாலமாக அக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் தாமதமாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இறுதி முடிவினை எதிர்பார்த்து ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி காத்திருக்கின்ற சூழலில் அக்கூட்டணியின் தலைமைக்குழுக் கூட்டம் நிகழ்நிலையில் அண்மையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது தமிழரசுக்கட்சி உறுதியான முடிவினை தெரிவிக்காது வெறுமனே தமது கட்சியை மையப்படுத்தி தீர்மானங்களை எடுப்பதற்கு முனைவார்களாக இருந்தால் அத்துடன் அவர்களுடனான உரையாடல்களை முடிவுக்கு கொண்டுவருவதோடு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தனியான தரப்பாக செயற்படும் என்ற அறிவிப்பை முதலிலேயே மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



