தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மீது நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தங்களது அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்துவதில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள். இலங்கை மீனவர் ஒருவர் தமிழ்நாட்டில், காவல்துறையினரின் முன்னிலையில்  தாக்கப்பட்டபோது அந்த அரசியல்வாதிகள் மௌனம் காக்கிறார்கள். தாக்குதலுக்குள்ளான இலங்கையரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவரை நாட்டுக்கு அழைக்கவும் அரசாங்கம் தலையிட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண மீனவர் ஒருவர் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார்.

அப்பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை மீனவர் ஒருவர் இந்தியாவில்  தமிழ்நாட்டு மீனவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட  மனதை உலுக்கும் காட்சிகள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.. இத்தகைய வன்முறைச் செயல்கள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவ்விவகாரத்தில் அரசாங்கம் தாமதமின்றி தலையிட்டு, அவரது உடனடிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த  வேண்டும். அவர் விரைவாகவும் பாதுகாப்பாகவும்  இலங்கைக்கு  திரும்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நான் வலியுறுத்துகிறேன்.

இலங்கையில் வட மாகாணத்தைச் சேர்ந்த எமது மீனவர்களை பாதுகாப்பதற்கு,  கடல்  எல்லை  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இச்சம்பவம்  எடுத்துக்காட்டுகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தங்களது அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்துவதில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள்.ஆனால், தமிழ்நாட்டில், அதுவும் அம்மாநில காவல்துறையினரின் முன்னிலையில்  எமது மீனவர் தாக்கப்பட்டபோது அந்த அரசியல்வாதிகள்  மௌனம் காக்கிறார்கள்.