தரம் குறைந்த நிலக்கரி மூலம் அண்ணளவாக 8.5 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மேலதிக நிதி இழப்புகளைத் தடுக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு போதுமான மற்றும் தரமான நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தத் தவறியமை அதன் விளைவாக நிறுவன நட்டங்களைக் குறைத்தல் மற்றும் மின்வழங்கல் பாதிப்புகளைத் தவிர்த்தல் முதலியவற்றில் அமைச்சர் தோல்வியடைந்துள்ளதாக கருதுகிறோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
வலுசக்தி அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர் மீது நம்பிக்கையில்லா முன்மொழிவை கொண்டுவரும்போது எமது கட்சியானது இவ்விடயம் ஏற்கனவே பொது முயற்சிகள் பற்றிய பாராளுமன்ற குழு ஏற்கனவே இது குறித்து விசாரித்து வருவதாலும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவ்விடயம் நிலுவையில் இருப்பதாலும், அவர் மீது விசாரணை முடிய முன்பு இந்த நம்பிக்கையில்லா முன்மொழிவு என்பது தேவையற்ற ஒன்று எனக் கருதியது. ஆனால் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் இவ்விடயம் இலகுவாக கடந்து செல்லும் ஒன்று என்று கருதவில்லை.
இலங்கையின் வலுசக்தித் துறையின் நிர்வாகம் ஆனது வரலாற்று அடிப்படையில் தேசிய பாதுகாப்பு, பொருளியல் உறுதிப்பாடு, பொதுமக்கள் நம்பிக்கை ஆகியவற்றின் சங்கமமாகத் திகழ்கிறது. வலுசக்தி அமைச்சருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா முன்மொழிவு ஆனது அரசியல் அமைப்பு, நன்னடத்தை மற்றும் நிருவாகக் காரணங்களை அடிப்படை ஆகக்கொண்டது.
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 35 பாராளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட இந்த முன்மொழிவு ,மூன்று முதன்மையான கவலைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையிலும், நேர்மையுடனும் செயற்பட வேண்டும். அத்துடன் மனச்சாட்சிப்படி நடத்தல் மற்றும் தமது கடமைகளுக்குப் பொறுப்புக் கூறுதல் போன்ற விடயங்களை அமைச்சர் மீறியதாக கருதப்படுகின்றது.
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிவையத்திற்குப் போதுமான மற்றும் தரமான நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதை உறுதிப் படுத்தத் தவறியமை அதன் விளைவாக நிறுவன நட்டங்களைக் குறைத்தல் மற்றும் மின் வளங்கல் பாதிப்புகளைத் தவிர்த்தல் முதலியவற்றில் அமைச்சர் தோல்வியடைந்துள்ளதாக கருதுகிறோம்.
வலுசக்தி அமைச்சர் இலங்கை உரக் குழுமத்தின் கொள்வனவு மேலாளராகப் பணியாற்றிய பொழுது அரசுக்கு அண்ணளவாக 8.86 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் பிணையில் இருக்கும் ஒருவர் அமைச்சர் பதவியில் நீடிப்பது பொது நலனுக்கும் நல்லாட்சிக்கும் எதிரானது என நாம் கருதுகிறோம்.இந்த முன்மொழிவானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்புக்கான மக்கள் ஆணையைச் சோதிக்கும் ஒரு முதன்மையான அரசியல் தேர்வாகக் கருதப்படுகிறது.
கொழும்பு மேல் நீதிமன்றினால் சுமத்தப்பட்ட ஊழல் குற்றச் சாட்டுகள் மற்றும் நிருவாகத் தவறுகளுக்குப் பின்பு வலுசக்தி அமைச்சர் அற அடிப்படையில் அவரது பதவியில் நீடிப்பதற்கான தகுதியை அவர் இழந்துள்ளதாகவே கருதுகிறோம்.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி வரை இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி வெப்பப் பெறுமானத்தில் மிகக் குறைவாக இருந்ததாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு உறுதிப்படுத்தி உள்ளது.இதன் காரணமாக நுரைச்சோலை மின் நிலையத்தில் 150 மெகாவாட்டிற்கும் அதிகமான மின் உற்பத்திப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் இன்றைய எரிசக்தி நெருக்கடி மற்றும் அரசின் கொள்கைகளின் பின்னணியில் இந்த முன்மொழிவு ஆராயப்பட வேண்டும்.மின்சாரசபை பொறியியலாளர் சங்கத்தின் கருத்துப்படி எதிர்வரும், காலப்பகுதியில் வறட்சி நிலையினால் இந்த நிலக்கரி தட்டுப்பாடு பாரிய மின்வெட்டுக்கு வழிவகுக்கும்.
இந்த நிலையைத் தடுக்கத் தவறியதே அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா முன்மொழிவுக்கான முதன்மையான காரணமாகும். இலங்கைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, கொள்வனவு நடைமுறைகளில் பாரிய தவறுகள் இடம் பெற்றுள்ளன.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் தொடக்கம் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி வரையில் வழங்கப்பட்ட நிலக்கரித் தொகுதிகள் மிகக் குறைந்த வெப்பப் பெறுமானத்தைக் கொண்டதாகவுள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது.லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கான லங்கா நிலக்கரி நிறுவனம் மேற்கொண்ட நிலக்கரி கொள்வனவு செயன்முறை மற்றும் 2025/ 2026 காலப்பகுதிக்கான நிலக்கரி பெறுகைகள் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘பதிவுக்கட்டணம் செலுத்தி தன்னை வழங்குனர் ஒருவராக பதிவுசெய்யாதபோதும்அவர்களுக்கு விதிமுறைகளுக்கு மாறாக நிலக்கரி வழங்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது’.இதே நிறுவனம் ஏற்கனவே தரமற்ற அரிசியை இலங்கைக்கு வழங்கி அகப்பட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.
இதன்மூலம் பெறுகை மூலதத்துவம் கொள்முதல் கொள்கை நியாயம் இல்லாமல் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.நிலக்கரி வழங்குனர்களிற்கான விநியோக அனுபவம் எந்தவிதமான முறையான தொழில்நுட்ப அல்லது சட்டரீதியான ஆலோசனைகளுமின்றி மாற்றப்பட்டு தளர்வான ‘தகுதி நிபந்தனை ‘ வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2025/ 2026 காலப்பகுதிக்கான நிலக்கரி வழங்குவதற்கான தெரிவுசெய்யப்பட நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்வதர்கான அனுமதி சட்டமா அதிபரிடம் இருந்து பெறுவதற்கு முன்னரே உடன்படிக்கை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.அத்துடன் பெறுகை நடைமுறைகளிற்கான காலம் 42 நாட்களில் இருந்து 21 நாட்களாக வேண்டுமென்றே குறைக்கப்பட்டதாக அவதானிக்கப்படுள்ளது.
நிலக்கரியை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முறையான திட்டமிடல் இன்மையினால் மின்சார வழங்கலில் பாதகமான தாக்கம் ஏற்பட்டமை கணக்காய்வில் கண்டறியப்பட்டுள்ளது.நிலக்கரியின் தரப்பரிசோதனையில் பலவித மோசடிகள் செய்யப்பட்டுள்ளது.’லங்கா நிலக்கரி கம்பனி கொள்வனவு செய்த நிலக்கரியின் தரத்தை ஆராய்வது தொடர்பாக விற்பனையாளருக்கும் கொள்வனவாளருக்கும் இடையே ஏற்பாடு உள்ளபோதும் உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை’
அதுமட்டுமல்ல குறித்த ஒரு நிறுவனத்திற்கு தரப்பரிசோதனைக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்ப்பட்டபோதும் அவ்வாறான அறிக்கை காணக்காய்வின்போது அவதானிக்கப்படவில்லை என்பதுடன் குறித்த அந்தநிறுவனமானது அவ்வாறான பரிசோதனைகளை செய்வதற்கான தகுதியை கொண்டிருக்கவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.
நிலக்கரி ஏற்றப்படும் துறைமுகத்தில் தரப்பரிசோதனைகான ஆய்வாளர்களை நியமிக்கவோ அல்லது மாதிரிகளை பெறவோ லங்கா நிலக்கரி நிறுவனம் தவறியுள்ளது.மின் நிலையத்தின் சீரான செயற்பாட்டிற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலக்கரியின் தரம் அது நிலக்கரியின் மொத்த கலோரி பெறுமதி 6150 ஆக இருக்கும்போது குறைந்த தரமான நிலக்கரி (4900-5900) பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மின்நிலையத்தால் உச்ச உற்பத்தித்திறனை அடைய முடியவில்லை.குறித்த நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தரமற்ற நிலக்கரி மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதால் அதே அளவான மின்சாரத்தை பெற அதிக எடை நிலக்கரியை பயன்படுத்த வேண்டி ஏற்பட்டது. ஏற்பட்ட நட்டம் 2237.7 மில்லியன் ரூபாவாகும்.
சாம்பல் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலக்கரியில் சாம்பல் அளவு 25 சதவீதம் வரை அதிகரித்ததால், மின் நிலைய இயந்திரங்கள் பாதிக்கப்பட்டதோடு, சாம்பலை மேலாண்மை செய்ய முடியாமல் திறந்த வெளியில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தரம் குறைந்த நிலக்கரி காரணமாக முதல் 09 கப்பல் தொகுதிகளிலும் அண்ணளவாக 8.5 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கணித்துள்ளது.மேலும், தரமற்ற நிலக்கரிரிப்பாவனையால் ஏற்பட்ட மின்சக்தி தட்டுப்பாட்டை ஈடு செய்ய டீசல் மூலம் மின் உற்பத்தி செய்தால் நாளொன்றுக்கு 50 மில்லியன் ரூபாய் கூடுதலாகச் செலவிடப்படுகிறது.
நீதிமன்றக் குற்றப்பத்திரிகையைக் கருத்திற்கொண்டு, அமைச்சரவையின் கெளரவத்தைப் பாதுகாப்பதற்கு இந்த முன்மொழிவு இன்றி அமையாதது என்பதோடு அரசின் ‘ஊழல் எதிர்ப்பு’ கொள்கையை நிலைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பீர்கள் என எண்ணுகிறோம்.தரம் குறைந்த நிலக்கரி மூலம் அண்ணளவாக 8.5 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிவையில், மேலதிக நிதி இழப்புகளைத் தடுக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.
கொள்வனவு நடைமுறையில் நிலவும் தவறுகளை வெளிப்படையான விவாதத்திற்கு உட்படுத்துவதன் மூலமும் தொடர் நடவடிக்கை எடுப்பதனூடாகவும் ஏற்கனவே பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் மேல் நிர்வாக குறைபாடுகளால் ஏற்படும் சுமையை திணிப்பதை தடுக்கமுடியும் என எண்ணுகிறேன்.
எந்தவோர் அமைச்சரும் சட்டத்திற்கும் பாராளுமன்ற நடத்தைக் கோவைக்கும் அப்பாற்பட்டவர் அல்லர் என்பதை நீங்கள் உறுதிப்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.கொள்வனவுச் சீர்திருத்தம்: வெளிப்படையான எண்மிய கொள்முதல் முறைகளை விரைவுபடுதுவீர்கள் என நம்புகிறோம்.
எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவில் ஊழலைத் தவிர்க்க வெளிப்படையான எண்மிய ஏல முறையைக் கட்டாயமாக்க வேண்டும். நிலக்கரி மீதான தங்கியிருப்பைக் குறைக்க சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதன் பொருட்டாக சூரிய மின்சக்தி மற்றும் மின்கலச் சேமிப்பு திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். மின் பற்றாக்குறையின் பொழுது பாதுகாப்பாக இருக்க இந்திய மின் வலையுடன் இலங்கையை இணைப்பதற்கான சாத்தியக்கூற்று ஆய்வுகளை விரைவுபடுத்த வேண்டும்.
இந்த முன்மொழிவு ஒரு தனிநபரைப் பற்றியது மட்டுமல்ல, அரசியல் பொறுப்புக்கூறலுக்கும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கும் இடையிலான சமநிவைவயப் பேணுவது பற்றியது ஆகும்.எனவே இந்த விவாதம் சான்றுகளின் அடிப்படையிலும், இலங்கைக் மக்களின் நீண்டகால நலன்களின் அடிப்படையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம்.




