தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தது என்பதை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. இந்த தரம் குறைந்த 9 கப்பல் நிலக்கரி காரணமாக நாட்டுக்கு 8497 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.இலங்கை விளையாட்டு
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், இந்த நிலக்கரியைப் பயன்படுத்தி முழுமையான உற்பத்தித் திறனை எட்ட முடியாமல் போயுள்ளது. ரஷ்ய நிலக்கரியை விட தென்னாப்பிரிக்க நிலக்கரி எரியும் விகிதம் அதிகமாக உள்ளது.
மின் உற்பத்தி நிலையத்தின் செயல்திறன் தரவுகளின்படி எதிர்பார்க்கப்படும் 5900 முதல் 6200 வரையான மட்டத்தை எட்ட இந்த நிலக்கரி தவறியுள்ளது. லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் அறிக்கைகளே மிகவும் துல்லியமானவை. அமைச்சோ அல்லது மின்சார சபையோ இந்தத் தரவுகளை ஏற்க மறுத்தாலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இவற்றை ஏற்றுக்கொண்டு தென்னாப்பிரிக்க நிலக்கரி தரம் குறைந்தவை என முறைப்படி அறிவித்துள்ளது.
இந்த தரம் குறைந்த 9 கப்பல் நிலக்கரி காரணமாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் 8497 மில்லியன் ரூபா என ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகிறது. மேலும், அதிக சாம்பல் உள்ளடக்கம் மற்றும் நீராவி வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக மின் உற்பத்தி நிலையத்தின் உபகரணங்கள் அதிகளவில் தேய்மானமடைவதற்கும், கொதிகலன்கள் சேதமடைவதற்கும் வாய்ப்புள்ளது.
தற்போது அரசாங்கம் அவசரமாக 5 நிலக்கரி கப்பல்களை கொள்வனவு செய்யத் தீர்மானித்திருப்பது, ஏற்கனவே கொண்டுவரப்பட்ட நிலக்கரியின் தரமின்மையை மறைமுகமாக ஒப்புக்கொள்வதாகும். ஐக்கிய மக்கள் சக்தி இதனைச் சுட்டிக்காட்டிய போது நிராகரித்த அமைச்சர்கள், இப்போது தரவுகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ள இந்த ஊழல் மற்றும் நஷ்டம் குறித்து நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.
பறக்கும் சாம்பல் உள்ளடக்க தரவுகளைப் பார்க்கும்போது, ரஷ்ய நிலக்கரி ஒரு கிலோவாட் மணிக்கு 0.46 கிலோ சாம்பலை உற்பத்தி செய்கிறது.தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் சாம்பல் உள்ளடக்கம் ஒரு கிலோவாட் மணிக்கு 0.93 கிலோ ஆகும். இது 102 வீதத்திலான அதிகரிப்பைக் காட்டுகின்றன. சாம்பல் வெளியாகும் தரவுகளை பகுப்பாய்வு செய்யும் போதும் கூட தென்னாப்பிரிக்க நிலக்கரி தரமற்றவை என தெரிகிறது.
நமது நாட்டிற்கு வருடத்திற்கு 36 நிலக்கரி கப்பல்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில், கேள்விக்கோரல் செயல்பாட்டின் ஊடாக நமது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் தரம் இல்லாமை காரணமாக மேலும் 5 நிலக்கரி கப்பல்களை அவசர கொள்முதல் மூலம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி இந்த விடயத்தை தொடர்ந்து சுட்டிக்காட்டிய சமயங்களில், அரசாங்கம் அதை மறுத்தது. நிலக்கரி தரமற்றதாக காணப்பட்டாலும், இங்கு ஊழல் நடக்கவில்லை என்று அமைச்சர்கள் கூறினர். பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் போது, தற்போதைய அரசாங்கம் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளதை தெளிவாக காட்டுகிறது. இது தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கும் நாட்டுக்கும் பதிலளிக்க வேண்டும் என்றார்.





