தித்வா புயல் தாக்கம் காரணமாக சேதமடைந்த தலைமன்னார் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும், இதுவரை பயணிகள் புகையிரத சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். ஆகவே விரைவாக தலைமன்னாருக்கான புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு வலியுறுத்துகிறோம் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த வருடம் ஏற்பட்ட தித்வா அனர்த்த நிலைமை காரணமாக தலைமன்னார் புகையிரத பாதையின் சில இடங்கள் சேதமடைந்தன. இதனால் தலைமன்னாருக்கான புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டது.
எனினும் தற்போது அந்தப் பாதையில் புகையிரதங்களை இயக்குவதற்குப் பொருத்தமான வகையிலும், 120 கி.மீ வேகத்தில் புகையிரதங்களை இயக்கக்கூடியவாறும் பாதையை அமைக்கும் பணிகளை வீதிப் பிரிவின் அதிகாரிகளும் ஊழியர்களும் நிறைவு செய்துள்ளனர். ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இதுவரையில் அந்தப் பாதையில் பயணிகள் புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முன்னதாக தலைமன்னார் பாதையில் காலை வேளையில் இரண்டு புகையிரத சேவைகளும், இரவு வேளையில் இரவு தபால் புகையிரதம் உட்பட தினமும் 4 புகையிரத சேவைகள் இயக்கப்பட்டன. குறிப்பாக, இந்த புகையிரதங்கள் மூலம் கொழும்பிலிருந்து அனுராதபுரம் வரை பயணிப்பதற்கு வடக்குப் பாதையைப் பயன்படுத்திய பயணிகள், இந்த சேவைகளைப் பயன்படுத்தித் தங்களின் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
தற்போது இப்பாதை புகையிரதங்களை இயக்குவதற்குப் பொருத்தமான வகையில் புனரமைக்கப்பட்டு நிறைவடைந்துள்ள போதிலும், புகையிரத எஞ்சின்கள் இல்லாத காரணத்தைக் காட்டி, இந்த பாதையிலான சேவைகளை ஆரம்பிப்பதைக் தாமதப்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.
எனவே, புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள இந்தத் தலைமன்னார் பாதையில், வழமை போன்று புகையிரத சேவைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சிடம் வலியுறுத்துகிறோம் என்றார்.





