தித்வா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம்!

தித்வா புயலால் வீடுகளை இழந்த மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு கம்பனிகளிடமிருந்து 10 பேர்ச் காணியை பெற்று, வீடமைத்து கொடுப்பதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய இது தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் திங்களன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் புதன்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், இந்த அமைச்சரவை தீர்மானம் கேள்வியெழுப்பிய போதே பிரதி அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

குறித்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளன. வெளியில் விமர்சிக்கப்படுவதைப் போன்று பெருந்தோட்ட மக்களின் காணி உரிமையை நிறுவனங்களிடம் வழங்கப்படவில்லை. தொழிலாளர்கள் தோட்டப் பகுதிகளுக்கு வசிக்க விரும்பாவிட்டால் 50 இலட்சம் ரூபாவைப் பெற்று தமக்கு விருப்பமான இடங்களில் குடியிருப்புக்களை அமைத்துக் கொள்ள முடியும்.

மாறாக தோட்டப்பகுதிகளுக்குள்ளேயே வீடுகளை அமைத்துக் கொள்பவர்களின் இருப்பிற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. காரணம் வீடுகள் அமைக்கப்பட்டவுடன் அவற்றில் குடியேறும் மக்களுக்கு காணி உரித்து வழங்கப்படும். எனவே அவர்கள் பெருந்தோட்டப்பகுதிகளில் தொழில் செய்யாவிட்டாலும், எவராலும் பலவந்தமாக அவர்களை அந்த வீடுகளிலிருந்து வெளியேற்ற முடியாது.

மேலும் இரத்தினபுரி – காவத்தை சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தனியார் பாதுகாப்பு படையொன்றே இவ்வாறு தாக்குதல்களை மேற்கொண்டு, அமைக்கப்பட்ட குடிசையை அகற்றியுள்ளது. அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளோம். அது மாத்திரமின்றி அந்த பிரதேசத்தில் மேலும் 20 பேருக்கு காணிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த விசாரணை அறிக்கையும் விரைவில் அமைச்சிற்கு சமர்;ப்பிக்கப்படும். அதற்கமைய மீண்டும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இவ்வாறு தாக்குதல்களுக்கு உள்ளாவதைத் தவிர்ப்பதற்கான நிரந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மலையக பெருந்தோட்ட மக்கள் எமது அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை காப்பாற்றப்படும் என்றார்.