தெற்காசிய பிராந்தியத்தில் சிவில் பதிவு மற்றும் முக்கிய புள்ளிவிபரங்களை வலுப்படுத்துவதுடன், பிராந்திய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தெற்காசிய சிவில் பதிவு நிபுணர்களின் மாநாடு திங்கட்கிழமை (13) கொழும்பில் ஆரம்பமானது.
இலங்கை பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமாகியுள்ள இந்த மூன்று நாள் மாநாடு, ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு, யுனிசெப் மற்றும் ‘வைட்டல் ஸ்டிரேட்டஜிஸ்’ ஆகிய சர்வதேச அமைப்புகளின் கூட்டுப் பங்களிப்புடன் நடத்தப்படுகிறது.
இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைத்தீவு, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த துறைசார் பிரதிநிதிகள் இந்த முக்கிய நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டின் போது, சிவில் பதிவு முறைகளை டிஜிட்டல் மயமாக்கல், தரவு ஆளுமை, நவீன தகவல் பரிமாற்ற தொழில்நுட்பங்களை கையாளுதல் மற்றும் எவரையும் விடுபடச் செய்யாத உள்ளடக்கிய பதிவுகளை உருவாக்குதல் போன்ற முக்கிய முன்னுரிமைகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
அத்துடன், பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்களின் அனுபவங்கள், சவால்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு சிறந்த தளமாக இம்மாநாடு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



