தேசிய மருந்து ஒழுங்குவிதி, 2026 கணக்காய்வு வேலைத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அரசு நிதிக்குழு ஆராய்வு

2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் 2025 செப்டெம்பர் 04ஆம் திகதி 2452/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி,  2026ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் மற்றும் 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் 121(5)(ii) நிலையியற் கட்டளையின் கீழ் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த புதன்கிழமை (03)  பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு கூடியது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் ஒழுங்குவிதி குறித்து கலந்துரையாடிய குழு, மருந்துகளைப் பதிவுசெய்யும் செயற்பாட்டில் வெளிப்படைத் தன்மை மற்றும் தெளிவுத் தன்மை என்பனவற்றை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதனையடுத்து, 2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் 2452/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

அத்துடன், 2026ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் குறித்தும் குழு கவனத்தில் எடுத்துக்கொண்டது. இத்திட்டத்திற்கு அமைய 2026ஆம் ஆண்டில் 3,508 கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது, 3,484 நிதிக் கணக்காய்வுகள், 11 செயல்திறன் கணக்காய்வுகள், 1 சுற்றாடல் கணக்காய்வு, 12 விசேட கணக்காய்வுகளை உள்ளடக்கியுள்ளது.

சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கி கூட்டுறவுகள் என்பன தொடர்பான கணக்காய்வுகளும் 2026ஆம் ஆண்டு முதல் கணக்காய்வாளர் நாயகத்தின் விடயதானத்திற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.

சமுர்த்தி தொடர்பான கணக்காய்வுகளை மேற்கொள்வதற்குப் போதுமான பணியாளர்கள் உள்ளனரா என்பது குறித்தும் குழு கரிசனை வெளியிட்டது. இதற்குப் பதிலளித்த பதில் கணக்காய்வாளர் நாயகம், தற்சமயம் இருக்கும் பணியாளர் எண்ணிக்கையைவிட 10%–15% பணியாளர்களுக்கான தேவை இருப்பதாகக் குறிப்பிட்டார். பிராந்திய அலுவலகங்கள் மூலம் முன்னோடி கணக்காய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவை பெப்ரவரி மாத இறுதிவரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், அதன் பிறகு ஆட்சேர்ப்பு மூலமாகவோ அல்லது வெளியிலிருந்து பணிக்கு அமர்த்துவதன் ஊடாகவோ பணியாளர்களுக்கான தேவை குறித்த தீர்மானத்தை எடுக்க முடியும் என்றார்.

 

 

மேலும், வருடாந்த வேலைத்திட்டம் கணக்காய்வுச் சட்டத்திற்கு அமைய பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படும் என்றும், அதன் படி எந்தவொரு மறுஆய்வு அல்லது பரிந்துரையும் சபாநாயகர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. விரிவான கலந்துரையாடலைத் தொடர்ந்து, கணக்காய்வாளர் நாயகத்தின் மதிப்பீட்டிற்கு உட்பட்டு சமுர்த்தி தொடர்பான கணக்காய்வுப் பணிகளுக்கு வெளியாட்களுக்கு வழங்குவதை ஆதரிப்பதென்ற கருத்தை சபாநாயகரிடம் முன்வைப்பதற்கும் குழு இணங்கியது. இதற்கமைய, முன்னோடித் திட்டத்தை செயற்படுத்தி, 2026 பெப்ரவரி இறுதியில் அது பற்றிய அறிக்கையொன்றை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் 121(5)(ii) நிலையியற் கட்டளையின் கீழ் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அமைச்சுக்களுக்கான முன்மொழிவுகள் மற்றும் அடுத்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிக் குழுவின் கண்காணிப்புக்கள் மற்றும் பரிந்துரைகளை இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அவசரகால அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் சீர்குலைந்த வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான ஒதுக்கீடுகளை குறைநிரப்பு மதிப்பீட்டின் மூலம் வழங்குவதற்கான தீர்மானம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் 2025 டிசம்பர் 05ஆம் திகதி விசேட கூட்டமொன்றைக் கூட்டியிருந்தது.

2025 ஜனவாி மாதம் 01 ஆம் திகதியில் தொடங்கி 2025 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியில் நிறைவடைகின்ற நிதியாண்டின் பயன்பாட்டிற்காக, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் திரட்டு நிதியிலிருந்து அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான வேறு ஏதேனும் நிதியத்திலிருந்து அல்லது நிதியிலிருந்து அல்லது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தற்றுணிவின் பிரகாரம் அரசாங்கத்தால் பெறப்பட்ட ஏதேனும் தொகையிலிருந்து ஐம்பதாயிரம் மில்லியன் ரூபாவினை (ரூபா 50,000,000,000) விஞ்சாத மேலதிக ஒரு தொகை செலுத்தப்பட வேண்டுமென்றும், அத்தகைய தொகை செலவிடப்படுமென்றும் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சேர் பெறுமதி சட்டத்தின் 71வது பிரிவின் கீழான ஒழுங்குவிதி பற்றியும் குழுவில் ஆராயப்பட்டு அனுமதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.