தையிட்டி திஸ்ஸ விகாரை காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் சனிக்கிழமை (11) மு.ப 11 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனதும் பங்கேற்பில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவின் தையிட்டி பகுதியில் திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை விடுவிக்குமாறு 17 பேர் தங்களுடைய கோரிக்கையினை முன்வைத்திருந்ததுடன், அவர்களுடைய காணி உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார்கள்.
கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தலைமையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகங்கா ஆகியோரின் பங்குபற்றலுடன் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் உறுதிப்படுத்தப்பட்ட உறுதிகள் கையளிக்கப்பட்டன.
மேற்படி காணிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக, நில அளவை திணைக்களத்தின் நில அளவீட்டை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் கடிதமொன்று அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் காணிகளை நில அளவீடு செய்யவேண்டிய தேவைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் காணி உரிமையாளர்களுக்கு தகவல் அறிவித்ததை தொடர்ந்து, அவர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் அடிப்படையில் எதிர்வரும் 17ஆம் திகதி காலை 9 மணிக்கு காணி உறுதிகளுக்கு அமைய காணி உரிமையாளர்களின் அடையாளப்படுத்தலுடன் நில அளவையினை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் குறித்த காணிகள் நில அளவை திணைக்களத்தினால் அளவீடு செய்யப்பட்டு நில அளவைத் திணைக்களத்தின் வரைபடம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் மாவட்ட செயலகத்தினால் ஏற்கனவே இது தொடர்பில் நியமிக்கப்பட்ட குறித்த குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு காணிகள் விடுவிப்பதற்குரிய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) பா.ஜெயகரன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகங்கா, சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர் என்.தர்மபாலா, நில அளவை அத்தியட்சகர் பிரேமதாஸ, காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.










