தொல்லியல் மரபுகளைச் சிதைக்கும் குழுவினர் குறித்து உடனடி விசாரணை அவசியம் – சீலரத்ன தேரர்

சிங்கள பௌத்த தொல்பொருள் மரபுகளைச் சிதைக்கும் வகையிலும், தொல்லியல் திணைக்களத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் செயற்படும் குழுவினர் குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்தி உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துமாறு ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள தொல்லியல் திணைக்களத்துக்கு செவ்வாய்க்கிழமை (11) சென்று, தொல்லியல் பணிப்பாளர் நாயகத்திடம் இது தொடர்பான முறைப்பாட்டு கடிதம் ஒன்றை உத்தியோகபூர்வமாகக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

தொல்லியல் திணைக்களத்தின் தனித்துவத்தையும் அதன் வரலாற்றுப் பெருமையையும் சீர்குலைக்கும் நோக்கில் சில பேராசிரியர்களும், திணைக்களத்தில் உள்ள குறிப்பிட்ட சில அதிகாரிகளும் சூழ்ச்சிகரமாகச் செயற்பட்டு வருகின்றனர். தற்போதைய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கிலும், நாட்டின் தொல்பொருள் மரபுகளைச் சிதைக்கும் வகையிலும் இவர்கள் காய்நகர்த்தி வருகின்றனர்.

குறிப்பாக, தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இலச்சினையில் வீற்றிருக்கும் தூபிச் சின்னத்தை மாற்றி, அதற்குள் ஏனைய மதங்களின் அடையாளங்களையும் உள்வாங்க வேண்டும் என சில பேராசிரியர்கள் கூறி வருகின்றனர். இத்தகைய அறிவற்ற செயற்பாடுகளால் நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்கள பௌத்த அடையாளங்கள் அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களத்தில் தற்போதுள்ள பணிப்பாளர் நாயகம் மிகவும் நேர்மையாகவும் பணிவுடனும் பணியாற்றக்கூடிய ஒரு அதிகாரியாவார். ஆனால், அவருக்குச் சரியான ஒத்துழைப்பை வழங்காமல், திணைக்களத்துக்குள்ளேயே இருந்து கொண்டு சுயநல நோக்கில் செயற்படும் சிலர் தடைகளை உருவாக்கி வருகின்றனர்.

இவ்வாறான நபர்கள் பற்றிய விரிவான அறிக்கை ஒன்றை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். அதேவேளை, புத்த சாசனத்தையும் தொல்லியல் திணைக்களத்தையும் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த கடிதத்தை கையளித்துள்ளேன்.

அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் கலாச்சார விவகாரங்களில் அலட்சியமாகச் செயற்படுகின்றனர். புத்தசாசன மற்றும் கலாச்சார அமைச்சரைத் தொடர்புகொள்ள முற்பட்டபோது அவர் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை. இருப்பினும், பிரதி அமைச்சருடன் உரையாடிய போது, இவ்வாறான பிழையான செயற்பாடுகளால் அரசாங்கத்துக்கு அவப்பெயர் ஏற்படுவதாக அவரும் ஒப்புக்கொண்டார். புத்தசாசனத்தையும் வரலாற்றுப் பாரம்பரியத்தையும் அழிக்க நினைப்பவர்கள் அதற்கான விளைவுகளைச் நிச்சயமாகச் சந்திக்க நேரிடும் என்றார்.