தோட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவேண்டும்

மண்சரிவு அபாயம் காரணமாக பாதிக்கப்பட்டு, இ/மாதம்பை இல. 02 தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள  தோட்ட மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவேண்டும் என்று  பெருந்தோட்டம் மற்றும் சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறினார்.

இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம்  இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் கே.ஜி.எஸ். நிசாந்தவின் ஏற்பாட்டில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் ஜானகி சம்பா ராஜரட்ண மற்றும் இரத்தினபுரி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து அவர் கூறியதாவது, இயற்கை பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட இப்பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமையை அவதானித்தேன். இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு அல்லது இயற்கை அபாயம் காரணமாக தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய இப்பகுதி தோட்ட மக்கள் 19 குடும்பங்களை சேர்ந்த சுமார் 78 பேர் இந்த பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இங்கு தங்கவைக்க முடியாது. இந்த மாதம்பை தோட்டத்தில் மக்கள் வசிக்கக்கூடிய தோட்ட குடியிருப்புக்கள் மற்றும் விடுதிகள் உள்ளன. அவற்றை வழங்க வேண்டும். அது முடியாவிட்டால் அரசாங்கத்தின் கொள்கைக்கமைய தற்காலிகமாக வாடகை வீட்டிலாவது குடியமர்த்த வேண்டும். இது குறித்து ஏற்கனவே தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளேன். எதிர்வரும் 16ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கு முன்னதாக இப்பாடசாலை பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும், உரையாற்றிய  குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார கூறியதாவது,

கொலன்ன எக்பர்த் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதி காணப்படுகின்றன. இங்குள்ள தோட்ட மக்கள் மழை பெய்தவுடன் தற்காலிகமாக வேறிடம் சென்று தங்குகின்றனர்.

இவர்களின் வாழ்க்கை மிகவும் பயங்கரமானது. எனவே இவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் புதிய வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என்றார்.

அத்துடன் பெருந்தோட்ட மனித ட்ரஸ்ட் நிறுவன அதிகாரிகள், தோட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 28 வீடுகள் அமைக்கப்படவுள்ளன என்றனர்.