நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன கருத்துத் தெரிவிக்கையில், மே மாத இறுதியில் தென்மேற்கு பருவக்காற்று ஆரம்பமாகும் வரை இந்த வெப்பமான சூழல் நிலவும் எனத் தெரிவித்தார்.
தற்போது முதலாவது இடைப் பருவக்காற்று காலம் ஆரம்பமாகியுள்ளதால், காற்றின் வேகம் மிகக் குறைவாகக் காணப்படுகிறது. இக்காலப்பகுதியில் சூரியன் நாட்டிற்கு நேர் உச்சியில் காணப்படுவதாலும், மேகமூட்டம் குறைவாக இருப்பதாலும் நிலப்பரப்பும் கடற்பரப்பும் அதிகளவில் வெப்பமடைகின்றன. இதன் விளைவாக வளிமண்டலத்தில் வெப்ப அலைகள் உருவாகி வெப்பநிலை அதிகரிப்பதாக அவர் விளக்கமளித்தார்.
எனவே, பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்பத்தின் தாக்கம் உச்சக்கட்டமாக இருக்கும் என அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, இக்காலப்பகுதியில் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறும், அதிகளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




