நிதி மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!

பல்வேறு நபர்களின் தேவைகளுக்காக சட்டவிரோதமான முறையில் டொலர் கையிருப்புகளை வெளற்றிய நிதி மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு நபர்களின் பெயர்களில் போலி நிறுவனங்களைப் பதிவு செய்து, அந்நிறுவனங்களின் பெயர்களில் வங்கி கணக்குகளை ஆரம்பித்து, அதன் ஊடாகப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் காண்பித்து வெளிநாட்டு நாணயங்களை வெளியேற்றியமை, அதற்குபதிலாக  போலி ஆவணங்களைத் தயாரித்தமை மற்றும் மோசடி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், கடந்த 19ஆம் திகதி நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியமுல்லைப் பகுதியில் வைத்து  மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைததான நபர் வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுநடவடிக்கைரய தொடர்ந்து  சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்படும் பணத்தை தனது நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிட்டு, அந்தப் பணத்தை மிகவும் நுணுக்கமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை உண்மையான தொகையை விடக் குறைத்துக் காட்டி, நாட்டிற்குச் சேர வேண்டிய சுங்க வரிகளை ஏமாற்றியுள்ளதுடன், போலி இறக்குமதிகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பணத்தையும் அனுப்பியுள்ளார். இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு, பெருமளவான சொத்துக்களை கொள்வனவு செய்ததன் மூலம், பணச் சுத்திகரிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளமை  தெரிவந்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி  1ஆம் திகதி முதல் 2025ஆம் ஆண்டு செப்டம்பர்  15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், 89 உள்நாட்டு நிறுவனங்கள் ஊடாகப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் காண்பித்துள்ளார்.

உள்நாட்டு வங்கிகள் மூலம் ‘டெலிகிராஃபிக் டிரான்ஸ்ஃபர்’ உள்ளிட்ட முறைகளில் பெருமளவிலான அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய போதிலும், எந்தவொரு பொருளையும் அவர் இறக்குமதி செய்யவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளது. இப்பாரிய நிதி மோசடிச் சம்பவம் குறித்து நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.