முறையான விலைமனுகோரல் மற்றும் பொது காரணிகளுக்கு அமைவாகவே நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. பொறுப்பற்ற வகையிலான பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்துவதை எதிர்க்கட்சியினர் தவிர்க்க வேண்டும். நிலக்கரி கொள்வனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றிருப்பதாக எதிர்க்கட்சியினர் ஊடகங்களில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்காமல் நீதிமன்றத்தை நாடலாம் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
நிலக்கரி கொள்வனவு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்கைக் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
2023 ஆம் ஆண்டின் விவரக்குறிப்பு மற்றும் விலைமனுக்கோரல் மற்றும் பொது நடைமுறைகளுக்கு அமைவாகவே நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி இறக்குமதியின் போது விலைமனுக்கோரல் முறைமையையோ அல்லது விவரக்குறிப்பு முறைமைகளையோ மாற்றவில்லை. நிலக்கரியின் தரம் குறித்து விசேட நிலைமை ஏதேனும் ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் விலைமனுகோரல் மற்றும் கொள்முதல் செயன்முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதற்கமையவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
நிலக்கரி விநியோகம் அல்லது அதன் தரம் தொடர்பாக எழக்கூடிய பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட முறைமைக்கு அமைவான முறைமை ஒன்று விலைமனு செயன்முறைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது, அதற்கமையவே செயல்பட்டுள்ளதால் தவறான விடயங்களை வெளியிட வேண்டாம் எனத் தான் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
‘ முறையான விலைமனு கோரலின்றி, நடைமுறையும் இன்றி, கடந்த ஆட்சியின் உறவுமுறைத் தொடர்புகளைக் கொண்ட நிறுவனம் ஒன்று அந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி நிலக்கரி விநியோகத்தை மேற்கொண்டு வந்தது. இம்முறை அவர்களும் விலைமனுகோரலில் கலந்துகொண்ட போதிலும், அவர்களுக்கு விலைமனுக்கனை பெற்றுக்கொள்ள முடியவில்லை. சிலர் அவர்களுக்காகவே பேசுகின்றனர்.
அவசரத் தேவை ஒன்று ஏற்பட்டால் நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. அவ்வாறு கொள்வனவு செய்தாலும் அதனால் நட்டம் ஏற்படாது. தற்போது 6 கப்பல் தொகுதிகள் துறைமுகத்திற்கு வந்துள்ளன. முதலாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளில் சில மாற்றங்கள் இருந்தாலும், ஏனையவை தேவையான மட்டத்தில் உள்ளன.ஆகவே போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
நிலக்கரி கொள்வனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றிருப்பதாக எதிர்க்கட்சியினர் ஊடகங்களில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்காமல் நீதிமன்றத்தை நாடலாம். எதிர்கட்சித் தலைவரும் ராஜபக்ஷர்’களின் வங்குரோத்து நிலையடைந்த அரசியல்வாதிகளை போன்றே செயற்படுகிறார் என்றார்.





