பெருந் தோட்டக் குடும்பங்களுக்கு நிலம் வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போது, மலையகப் பகுதியில் நிலம் இல்லை என்றும், நிலங்களை இணைந்து தேடலாம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்தார். நாட்டின் தலைவராக, அனைத்து மக்களினதும் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாப்பது அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதியின் கடமையாகும். நிலம் இல்லை என்று கூறி பொறுப்பை வேறு திசைக்கு மாற்றி தமது கடமையிலிருந்து விலக முடியாது என கண்டி – சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பெ.முத்துலிங்கம் தெரித்தார்.
கொழும்பு – குளோபல் டவர் ஹோட்டலில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தித்வா புயல், நாடெங்கும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அழிவுகளை ஏற்படுத்தியது. இதனால் நேரடியாக 524,188 குடும்பங்களும், 1,812,311 தனி நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மேலாக பலர் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக பதுளை, கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தனை ஆகியவை காணப்படுகின்றன. இம்மாவட்டங்களில் மாத்திரம் 21 சதவீதமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் கவலைக்குரிய விடயமாக, பதிவான மரணங்களின் 69 சதவீதமானவையும், காணாமல் போளவர்களின் 72 சதவீதமானவையும், முற்றாக அழிந்த வீடுகளின் 55 சதவீதமானவையும், மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் 33 சதவீதமானவையும் இந்த மாவட்டங்களிலிருந்தே பதிவாகியுள்ளன.
அனர்த்தத்துக்கு பின்னரான உடனடி காலகட்டத்தில், அரசாங்கம், சிவில் சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் இணைந்து மீட்பு நடவடிக்கைகள், அவசர தங்குமிடங்கள் மற்றும் உணவு உதவிகள் மூலம் பாராட்டத்தக்க ஆதரவை வழங்கினர். ஆனால் தற்போது, பாதிக்கப்பட்ட சமூகங்கள் பாதுகாப்பான மீள்குடியேற்றத்தையும், நிலையான வாழ்வாதாரத் தீர்வுகளையும் அவசரமாக கோருகின்றனர்.
இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுடன் தெருக்கமாக செயல்படும் சிவில் சமூக அமைப்புகள், வரலாற்று ரீதியாக புறக்கணிக்கப்பட்ட மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.
ஏனெனில், புயலால் அவர்களின் பாதிப்புகள் மேலும் தீவிரமடைந்துள்ளன. அனர்த்தத்திற்குப் பின்னர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனைத்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களையும் பார்வையிட்டு, வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும், நிலம் மற்றும் வீடமைப்பு மானியங்களை விடுவிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் உரையாற்றிய போது, மலையகப் பகுதிகளில் உள்ள 611 வீதிகள் தனியார் தோட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவற்றை உள்ளுராட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தோட்டக் குடும்பங்களுக்கு நிலம் வழங்குமாறு கோரிய போது, மலையகப் பகுதியில் நிலம் இல்லை என்றும், நிலங்களை இணைந்து தேடலாம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். தித்வா புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட பதுளை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் பெரும்பாலும் தோட்டப் பகுதிகளாகும் என்பதும், அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டின் தலைவராக, அனைத்து மக்களினதும் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாப்பது அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதியின் கடமையாகும். நிலம் இல்லை என்று கூறி அல்லது பொறுப்பை வேறு திசைக்கு மாற்றி தமது கடமையிலிருந்து விலக முடியாது குறிப்பாக முன்பு வழங்கப்பட்ட பொது உறுதிமொழிகளை புறக்கணிக்கலாகாது.
ஜனாதிபதியாக பதவி ஏற்கும்முன், ‘ஒரு குடிமகனுக்கு நிலம் இல்லையெனில் குடியுரிமையின் பயன் என்ன?’ என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில், மலையகத் தமிழ் சமூகத்தின் பிரதான பிரச்சினை வீடமைப்பு நெருக்கடியே. மக்கள் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (2012ஃ2013) வெளியிட்ட தகவலின்படி, 67.8 சதவீதமான மலையகத் தமிழர்கள் இன்னும் லயன் வீடுகளிலேயே வசிக்கின்றனர்.’ எனக்குறிப்பிட்டுள்ளது.
மேலும் அப்பிரகடனத்தில், வாழத் தகுந்த வீடுகளை உறுதி செய்ய தேசிய வீடமைப்பு திட்டத்தை அமுல்படுத்துதல், தோட்ட தொழிலை விட்டு வெளியேறும் தொழிலாளர்களை வெளியேற்றுவதைத் தடுத்தல், தங்களின் சொந்த வளங்களை பயன்படுத்தி வீடுகள் கட்டிய குடும்பங்களுக்கு சட்டபூர்வ நில உரிமைப் பத்திரங்கள் வழங்குதல், மலையக மக்களுக்கு மட்டுமல்லாமல், பிற பகுதிகளில் குடியேறியவர்களுக்கும் நில உரிமைகளை உறுதி செய்தல், பயிரிடப்படாத மற்றும் கைவிடப்பட்ட தோட்ட நிலங்களை இளைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி இந்த வாக்குறுதிகளை மறந்துவிட்டாரா? அல்லது அரசாங்கம், மலையகத் தமிழ் சமூகத்தின் நில உரிமைகளை புறக்கணித்து, தோட்ட நிறுவனங்களின் நலன்களுக்கு முன்னுரிமையளிக்கிறதா? என்ற கேள்வி எழுகின்றது. மேலும் ஜனாதிபதி தோட்ட வீதிகள் தொடர்பில், 611 வீதிகள் அரசாங்க கட்டுப்பாட்டில் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, தோட்ட சமூகங்களை பாதுகாக்க அவ்வீதிகளை அரசின்கீழ் கொண்டு வர வேண்டும் என்றார். ஆனால், இது நடைமுறையில் உள்ள சட்டப்பிரிவுகளை புறக்கணிப்பதாகும்.
அதாவது 1987 ஆம் ஆண்டின் பிரதேச சபை திருத்தச் சட்டம் இல.15 பிரிவு 2(2) இன் கீழ், தோட்டப் பகுதிகளில் உள்ள பிரதேச சபைகளுக்கு, சிறப்பு நீர்மானம் மற்றும் தோட்ட நிர்வாகத்துடன் ஆலோசனை செய்து, வீதிகள், கிணறுகள் மற்றும் பொதுவான வசதிகளுக்காக நிதி பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிவு 2(3)(0) இன் படி, இவ்வாறு அமைக்கப்பட்ட அல்லது பராமரிக்கப்பட்ட வீதிகள் மற்றும் வசதிகள் பிரதேச சபைக்கு உரியதாகி, பொதுச் சொத்துகளாகக் கருதப்பட வேண்டும். எனவே இதனை பயன்படுத்தி உடனே 611 தோட்ட வீதிகளை அரசின் கீழ் கொண்டு வரலாம்.
மேலும், 2021 ஆம் ஆண்டுக்கான பேரிடர் முகாமைத்துவ மையத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களில் தோட்டங்களுக்கு அருகிலான நிலங்களை வீடமைப்பிற்காகப் பெற பரிந்துரைக்கிறது. குறிப்பாக, மனித குடியிருப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நிலையில், தோட்ட நிலங்கள் தொடர்ந்து பணப்பயிர்களின் விரிவாக்கத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றபோது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அரசால் நியமிக்கப்பட்ட குழு, தோட்டத் துறையில் சுமார் 37,000 ஹெக்டேயார் தரிசு நிலம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டது நினைவுகூறத்தக்கது.
வரலாற்று ரீதியாக, கடந்தகால அரசாங்கங்கள், சட்டங்களை மீதி தோட்டங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி நிறுவனங்களுக்கு பயணிக்கும் உப குத்தகை முறைகளை அனுமதித்துள்ளன. ஆகவே வீடமைப்பிற்காக நிலம் பெறுவது, தோட்ட உற்பத்தித்திறனையோ அல்லது நிறுவனங்களின் நிலைபேற்றுத் தன்மையையோ பாதிக்காது.
எனவே, அரசாங்கத்தை நாங்கள் கோருவது யாதெனில் மண்சரிவு பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், மற்றும் மண்சரிவு அபாயப் பகுதிகளில் வாழும் குடும்பங்களின் வாழ்வாதார தேவைகளை கருத்திற் கொண்டு, அவர்களின் பழைய குடியிருப்புகளுக்கு அருகிலான பாதுகாப்பான இடங்களில் நிலம் வழங்க வேண்டும்.
பாதுகாப்பு மையங்கள் முறையாக மூடப்படும் வரை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை உறுதி செய்யும் வகையில் அவற்றை மறுசீரமைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனியான இடங்களை ஒதுக்கி தர வேண்டும். 611 தோட்ட வீதிகளையும், பிரதேச சபைச் சட்டத்தின் விதிகளுக்கு ஏற்ப, உரிய பிரதேச சபைகளின் கீழ் கொண்டு வர வேண்டும். 1987 முதல் பல்வேறு காலகட்டங்களில் தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட 37,000 வீடுகளுக்கு காணி உரிமைப் பத்திரங்களை வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர் மற்றும் தோட்ட தொழிலாளர் அல்லாத தோட்டத்தில் வாழும் குடும்பங்களுக்கு, பயன்படுத்தப்படாத லயன் வீடுகள் மற்றும் பொதுக் கட்டிடங்களை தற்காலிகமாக வழங்க உத்தரவிட வேண்டும். பல தோட்டங்களுக்கு மத்தியில் பாதுகாப்பான பொதுக்குடியேற்றங்களை உருவாக்கி, அங்கிருந்து தோட்ட தொழிலாளர்கள் தோட்ட வேலைக்கு அல்லது பணிகளுக்கு செல்லும் வாய்ப்பினை உருவாக்க வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்காவிடின் தோட்டத் துறையிலுள்ள சமத்துவமின்மை மற்றும் புறக்கணிப்பு மேலும் வேரூன்றும். பாதிக்கப்பட்ட அனைத்து சமுகங்களுக்கும் நீதியான சட்டபூர்வமான மற்றும் மனிதாபிமான மீட்பை உறுதிப்படுத்த அரசாங்கத்துடன் பாகுபாடு கட்டாமல் செயற்பட வேண்டும் எனக் கோருகின்றோம் என்றார்.



