நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்டது ரஃபா எல்லை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, காசா மற்றும் எகிப்துக்கு இடையிலான ரஃபா (Rafah) எல்லை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. போரினால் சிதைந்துபோன காசாவிலிருந்து மக்கள் வெளியேறவும், வெளியேறியவர்கள் மீண்டும் தாயகம் திரும்பவும் இது ஒரு முக்கிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த மே 2024-இல் இஸ்ரேல் இராணுவம் ரஃபா எல்லையைக் கைப்பற்றியது முதல், இந்தப் பாதை பெரும்பாலும் மூடப்பட்டே இருந்தது.

தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் அக்டோபர் மாதம் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக இந்த எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டம் ஆரம்பித்த நிலையில், எல்லையைத் திறப்பது ஒரு முக்கிய நிபந்தனையாக இருந்தது.

எல்லை திறக்கப்பட்டாலும், இதில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன:

எல்லையைக் கடக்கும் மக்கள் சுமார் 2.5 கி.மீ தூரம் நடைபாதையாகவே கடக்க வேண்டும். வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

முதல் நாளில் காசாவிற்குள் நுழைய 50 பேருக்கும், வெளியேற 50 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உள்ளே நுழையும் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் இராணுவத்தின் மிகத்தீவிரமான பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

யாருக்கு முன்னுரிமை?

போரின் ஆரம்பக் கட்டங்களில் காசாவை விட்டு வெளியேறிய சுமார் 1 இலட்சம் பாலஸ்தீனியர்களில், முதற்கட்டமாக சிலருக்கு மீண்டும் தாயகம் திரும்ப அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல், வைத்திய சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகள் மற்றும் அவசரத் தேவையுள்ளவர்கள் வெளியேறவும் இது உதவும்.

எகிப்து எல்லையை ஒட்டிய பிலடெல்பி வழித்தட பகுதியில் இஸ்ரேல் இராணுவம் முள்வேலிகளுடன் கூடிய வலுவான கொங்கிறீட் சுவர்களை எழுப்பியுள்ளது. எல்லை திறக்கப்பட்ட போதிலும், திங்கட்கிழமை வடக்கு மற்றும் தெற்கு காசாவில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் 3 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகப் பாலஸ்தீனத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.