நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது!

இலங்கையில் 1983 முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்கள்சார் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டிப் பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். இந்த சிறுவனின் உறவினர் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் இந்த சம்பவத்துக்கும் நீதி கிடைக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு 2026.01.13 ஆம் திகதியன்று ‘ இலங்கையில் மோதல்கள்சார் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள்’ தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்கமோ அல்லது விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரோ பதிலளிக்கவில்லை.

இலங்கையில் 1983 -2009 வரையான காலப்பகுதியில் பாலியல் ரீதியான வன்முறைகள் தீவிரமடைந்தன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் 23 பெண்களும், 04 ஆண்களும் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து சாட்சியமளித்துள்ளார்கள்.அறிக்கையில் ஆதாரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

1983 -2009 வரையான காலப்பகுதியில் பாலியல் ரீதியான சித்திரவதைகள் இந்த நாட்டில் கூர்மையடைந்தன. குற்றவாளிகள் பலர் இன்றும் சுதந்திரமாக உள்ளார்கள். ஒருசிலர் பதவிகளிலும் உள்ளார்கள். இந்த அரசாங்கம் சட்டத்தை மதித்து செயற்படுவதாயின் இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

யுத்த சூழலில் உயிர்பிழைத்தவர்கள் புகாரளிப்பதற்கு முடியாத அளவுக்கு பல்வேறுப்பட்ட வகையில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். நீதிக்கான காத்திருப்பும் காலவோட்டத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுவது நீதி பொறிமுறைக்கு முரணானது. ஆகவே இந்த அறிக்கை பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது . ஆகவே நீதி வழங்கலில் இந்த அறிக்கையை ஒரு ஆதாரமாக கொள்ள வேண்டும் என்றார்.